ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ஆறு வீரர்களில் நான்கு பேரின் பெயர்களை பென்டகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, குவைத்தின் போர்ட் ஷுவைபா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ராணுவ கட்டுப்பாட்டு அறை மீது ஈரான் ஆதரவு அமைப்பினர் நடத்திய நேரடி தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த நான்கு வீரர்களும் அயோவாவின் டெஸ் மொய்ன்ஸ் நகரை சேர்ந்த 103வது சஸ்டைன்மென்ட் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டாலும், அவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
உயிரிழந்தவர்களில் புளோரிடாவை சேர்ந்த கேப்டன் கோடி ஏ. கோர்க் , நெப்ராஸ்காவை சேர்ந்த சார்ஜென்ட் நோவா எல். டைட்ஜென்ஸ், மினசோட்டாவை சேர்ந்த பெண் சார்ஜென்ட் நிக்கோல் எம். அமோர் மற்றும் அயோவாவை சேர்ந்த ஸ்பெஷலிஸ்ட் டெக்லான் ஜே. கோடி ஆகியோர் அடங்குவர். உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில், ஒரு அலுவலகம் போல செயல்பட்ட அந்த தற்காலிக கட்டிடத்தின் மீது ட்ரோன் நேரடியாக தாக்கியது. எந்தவித எச்சரிக்கை ஒலியும் அல்லது அபாய சங்கோ முழங்காததால், வீரர்கள் பதுங்கு குழிகளுக்கோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கோ செல்ல வாய்ப்பில்லாமல் போனதாக தெரிகிறது. இந்த தாக்குதல் குறித்து சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தாக்குதலுக்கு பிறகு பல மணிநேரம் அந்தக் கட்டிடம் புகைந்து கொண்டிருந்ததாகவும், வெடி விபத்தின் வேகத்தில் கட்டிடத்தின் சுவர்கள் வெளிப்புறமாகத் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், அந்த ராணுவ மையம் பலப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்தது என்றும், வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஒரே ஒரு ட்ரோன் மட்டும் ஊடுருவியதே இந்த துயரத்திற்குத் காரணம் என்றும் தெரிவித்தார். இருப்பினும், தரைப்படை அதிகாரிகள் சிலர், பாதுகாப்பதற்கு சிரமமான அந்த இடத்தில் இவ்வளவு அதிகமான வீரர்களை தற்காலிகமாக தங்க வைத்தது தவறான முடிவு என்று ஏற்கனவே விவாதித்ததாக தகவல்கள் கசிகின்றன. இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வீரர்களின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார். “நாகரிகத்திற்கு எதிராக போர் தொடுத்துள்ள பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இந்த நான்கு வீரர்களும் தங்களின் மிக உயர்ந்த தியாகத்தை செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் டான் கெய்ன் தெரிவித்துள்ளார். தேசம் ஒருபோதும் இவர்களை மறக்காது என்றும், அவர்களின் குடும்பத்தினருடன் அமெரிக்க ராணுவம் துணை நிற்கும் என்றும் அவர் உறுதி அளித்தார். மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களின் தொடர் உயிரிழப்புகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் அடுத்தடுத்த தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் பதிலடி நடவடிக்கைகள் இந்தப் பிராந்தியத்தை ஒரு நீண்ட காலப் போருக்குள் தள்ளியுள்ளதுடன், உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
