திடீரென 73% அமேசான் ஊழியர்கள் விலகுகிறார்களா? என்ன காரணம்?

By Bala Siva

Published:

 

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தில் இருந்து திடீரென 73% ஊழியர்கள் விலக இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆன்டி ஜாஸி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது (Work from Home) கிடையாது என்றும், அனைத்து ஊழியர்களும் வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு காரணமாக பல ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக ஊழியர்களிடையே சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சர்வேயில் 73% ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வசதி இல்லாததால் வேலையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 2585 ஊழியர்களிடமிருந்து இந்த சர்வே எடுக்கப்பட்டதாகவும், 91% ஊழியர்கள் அமேசான் அறிவிப்பு காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை நிறுத்திவிட்ட நிலையில், அமேசானும் அடுத்த ஆண்டு ஜனவரி 2 முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது (Work from Home) அனுமதி இருக்காது என அறிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் அமேசானின் பல கிளைகளில் இந்த புதிய நடைமுறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.