செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக, ஏற்கனவே வேலைவாய்ப்புகள் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையில், புதிய வேலை வாய்ப்புகளும் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரிய பெரிய நிறுவனங்கள்கூட வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. செலவை குறைப்பதற்காகவே இந்த வேலை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், ஏற்கனவே சில முறை வேலை நீக்க நடவடிக்கை மேற்கொண்ட அமேசான் நிறுவனம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 14 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 30 ஆயிரம் டாலர் முதல் மூன்று லட்சம் டாலர் வரை சம்பளம் பெறும் அதிகாரிகள் தான் தற்போது வேலை நீக்க நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏஐ மற்றும் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியுள்ளதால், மேலாண்மை கண்காணிப்பு தேவையும் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொருளாதார அழுத்தம், செலவு குறைப்பு, எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இனிமேல் எந்த ஒரு நிறுவனத்தையும் முழுமையாக நம்பி வேலைக்கு செல்ல முடியாது என்றும், மாணவர்கள் படிப்பு முடிந்தவுடன் சிறு குழுவாக அமைத்து ஸ்டார்ட் அப் தொழிலை தொடங்குவதே அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பு என்றும் கூறப்படுகிறது.