சீனாவில் ஒரு ஓட்டுநர் மிகுந்த விழிப்புடன் காரை ஓட்டி கொண்டிருந்த நிலையில், அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அவர் தூங்குவதாக தவறாகக் கணித்து எச்சரிக்கை செய்தி அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள சில கார்களில் உள்ள AI அமைப்பு, ஓட்டுநர் தூங்கினால் அல்லது தூக்கத்தின் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக எச்சரிக்கை செய்தியை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனாவை சேர்ந்த ஒரு ஓட்டுநர் மிகவும் விழிப்புடன் கார் ஓட்டி கொண்டிருந்தபோது, திடீரென AI தொழில்நுட்பம் “தயவுசெய்து காரை ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள், தூங்க வேண்டாம்” என்று செய்தி அனுப்பியது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உண்மையில், அந்த ஓட்டுநருக்கு இயல்பாகவே கண்கள் மிகவும் சிறியதாக இருந்ததால், அவர் விழித்திருந்தாலும்கூட கண்கள் மூடியிருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிந்துள்ளது. அதை புரிந்துகொள்ளாத AI தொழில்நுட்பம், அவர் தூங்குவதாக தவறாக கணித்து எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.
ஓட்டுநருக்கு ஏற்கனவே சிறிய கண்கள் என்பது மட்டுமின்றி, அவர் கார் ஓட்டும் போது சூரிய ஒளி கண்களில் விழுந்ததால், அவர் சரியாக பார்க்க முடியாமல் கண்களை சிமிட்டியுள்ளார். இதையும் AI தொழில்நுட்பம் அவர் தூங்க முயற்சிப்பதாக புரிந்துகொண்டு தொடர்ந்து எச்சரிக்கை செய்திகளை அனுப்பியுள்ளது. இந்த எச்சரிக்கையை பார்த்து அவரது அருகில் அமர்ந்திருந்த டிரைவரின் சகோதரி சிரித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கிட்டத்தட்ட 20 முறை இந்த எச்சரிக்கை செய்தி வந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். “AI தொழில்நுட்பம் நான் தூங்கிவிட்டதாகவே நினைக்கிறது. ஆனால், நான் என் கண்களை கஷ்டப்பட்டு அகல திறந்ததும் அந்த எச்சரிக்கை மெசேஜ் நின்றுவிட்டது. என் கண்கள் இயல்பாகவே சிறியதாக இருப்பதால் நான் தூங்குகிறேன் என்று AI நினைக்கிறது,” என்று அந்த ஓட்டுநர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோவுக்கு பல நகைச்சுவையான கருத்துகள் பதிவாகி வருகின்றன. “சிறிய கண்கள் உடையவர்களுக்காக என பிரத்யேகமாக AI தொழில்நுட்பத்துக்கு தனியாக புரோகிராம் செய்ய வேண்டும்” என்பது உட்பட பல கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. இந்த சம்பவம், AI தொழில்நுட்பம் மனிதர்களின் தோற்றத்தை எப்படி தவறாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும், அத்தகைய சூழல்களில் அது எவ்வாறு சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
