AI மூலம் கஸ்டமர் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து 600 ஊழியர்களை போன்பே நிறுவனம் வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
AI தொழில்நுட்பம் உலகளவில் நாளுக்கு நாளாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில், மனிதனுக்கு மாற்றாக இந்த தொழில்நுட்பம் செயல்பட்டு வருவதாகவும், எனவே மனிதர்களின் வேலைவாய்ப்பு அதிக அளவில் பறிபோய் கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போன்பே நிறுவனம் கஸ்டமர் சர்வீஸ் முழுமையாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதால், கிட்டத்தட்ட 600 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதாகவும், இன்னும் சில ஊழியர்கள் வேலை நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போன்பே நிறுவனத்தில் 1100 கஸ்டமர் சர்வீஸ் ஏஜண்டுகள் இருந்த நிலையில், தற்போது 600 பேர் நீக்கப்பட்டு விட்டதாகவும், AI மூலம் கஸ்டமர் சர்வீஸ் 90% கஸ்டமர்களின் திருப்தியை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் போன்பே நிறுவனத்துக்கு செலவு குறைந்ததாகவும், இன்னும் கூடுதலாக AI மூலம் கஸ்டமர் சர்வீஸ் செய்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கஸ்டமர் கேட்கும் கேள்விகளுக்கும் மிகவும் துல்லியமாகவும் நுட்பமாகவும் AI பதில் அளிப்பதாகவும், மனிதர்கள் பதில் அளிப்பதை விட AI தொழில்நுட்பம் மூலம் கிடைக்கும் பதிலில் கஸ்டமர்கள் முழு திருப்தி அடைவதாகவும் போன் பே நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன்பே நிறுவனம் மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களும் கஸ்டமர் சேவைக்கு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி விட்டதால், இந்த துறையில் மிகப்பெரிய வேலை இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.