இன்று மாலை சுமார் 7 மணி அளவில் UPI சரியாக வேலை செய்யவில்லை என்றும், பணம் அனுப்பினாலும் பெறுபவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றும் புகார்கள் வெளிவந்தன. மேலும், பலருக்கு UPI செயலியே ஓப்பன் ஆகவில்லை என்றும் கூறப்பட்டது.
இது குறித்து ஏராளமான புகார்கள் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், UPIக்கு அடுத்ததாக மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு செயலிகளும் டவுன் என்ற செய்தி உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, “இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது?” என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து புகார்கள் DownDetector இணையதளத்தில் பதிவாகி வருவதோடு, தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மெட்டா நிறுவனம் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியே விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் இந்த பிரச்சனை இருப்பதாகவும், இந்த கோளாறு தொடர்பாக பலரும் புகார் அளித்து வரும் நிலையில், தொழில்நுட்பக் குழுவினர் இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் நிலையில், இந்த இரண்டு செயலிகளும் ஒரே நேரத்தில் டவுன் ஆனது பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.