அரசியல் களத்தில் நிலவும் தற்போதைய சூழல்கள், குறிப்பாக மும்பை தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் தேசிய அளவிலான தாக்கம் குறித்து மூத்த அரசியல் ஆய்வாளர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர அரசியலை பொறுத்தவரை, பால்தாக்கரேவின் சிவசேனா என்பது தற்போது மெல்ல ஓரமாகி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவாக உருவெடுத்துள்ளது. உத்தவ் தாக்கரேவின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், அவர் ஒருபோதும் தரைமட்ட தொண்டர்களுடனும், மக்களுடனும் நேரடி தொடர்பில் இருந்ததில்லை. பால்தாக்கரே பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியே செல்லாவிட்டாலும், ஒரு நாளைக்கு 9 முதல் 10 மணி நேரம் மக்களை சந்திப்பதையே தனது பணியாகக் கொண்டிருந்தார். ஆனால், உத்தவ் தாக்கரே தனது சொந்த எம்.எல்.ஏ-க்களையே சந்திக்க மறுப்பது, ஒரு மாபெரும் இயக்கத்தை சிதைப்பதற்கே வழிவகுக்கும் என்பது நிதர்சனம்.
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பாஜகவின் வளர்ச்சி என்பது தற்செயலானது அல்ல; அது அவர்களின் 24 மணிநேர உழைப்பிற்கு கிடைத்த பலன். 25-30 இடங்களில் முடங்கி கிடந்த பாஜக, தற்போது 90 இடங்கள் வரை வளர்ந்திருக்கிறது. ஆனால், ஊடகங்கள் திட்டமிட்டு உத்தவ் தாக்கரேவுக்கு சாதகமான ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றன. ஒரு பழமொழி சொல்வது போல, ‘அத்தைக்கு மீசை முளைத்தால் அவரை சித்தப்பா’ என்று சொல்ல துடிக்கும் ஊடகங்களின் முயற்சி இது. உத்தவ் தாக்கரே வெறும் 3 அல்லது 4 பொதுக்கூட்டங்களை மட்டுமே நடத்திவிட்டு தேர்தலை வென்றுவிடலாம் என்று நினைத்தது அரசியல் அறியாமையே தவிர வேறொன்றுமில்லை. பாஜகவின் இந்த வெற்றி பயணம் வரும் தேசிய தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜி தற்போது கடும் விரக்தியில் இருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோரின் வழியில் மம்தாவும் மத்திய ஏஜென்சிகளுடன் மோதுகிறார். ஆனால், ஹேமந்த் சோரன் தனது பதவியை துறந்து, சட்டத்திற்கு ஒத்துழைத்து அனுதாப அலையை தேடிக்கொண்டார். கெஜ்ரிவால் சிறையிலிருந்து ஆட்சி நடத்துவதாக கூறி அரசியல் பிழைகளை செய்தார். மம்தா பானர்ஜி போராட்டங்களின் மூலம் வளர்ந்த தலைவர் என்றாலும், தற்போது அவர் சிஏஏ மற்றும் என்ஆர்சி விவகாரங்களில் காட்டும் எதிர்ப்பு, மறைமுகமாக பாஜகவின் ‘விக்டிம் ஹுட்’ அரசியலுக்கே சாதகமாக முடிகிறது. ஒரு முதிர்ச்சியான தலைவராக அவர் கட்சி கட்டமைப்பை சீரமைக்காமல், வீதியில் இறங்கித் தமாஷ் செய்வது அவருக்கு பெரும் பின்னடைவைத் தரும்.
மேற்கு வங்கத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக ஓவைசி திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்காளர்கள் போலி மதச்சார்பற்ற கட்சிகளை தவிர்த்துவிட்டு, தங்களுக்கு ஒரு உண்மையான முஸ்லிம் தலைமை வேண்டும் என்று ஓவைசி பக்கம் திரும்பியது போலவே, வங்காளத்திலும் நடக்கும். ஓவைசி பிரிக்கும் ஒவ்வொரு வாக்கும் மம்தா அல்லது காங்கிரஸுடையதாகத்தான் இருக்குமே தவிர, பாஜகவின் வாக்குகளாக இருக்காது. இது பாஜகவின் வெற்றிக்கு மறைமுகமாக வழிவகுக்கும் ஏவுகணை போன்றது. ஒரு சமூகத்திற்கு உண்மையான தலைமை கிடைக்கும்போது, அவர்கள் போலி மதச்சார்பற்ற பிம்பங்களுக்கு பின்னால் செல்லமாட்டார்கள் என்பது இங்கே தெளிவாகிறது.
தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை, மேற்கு வங்கம், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இப்போதும் சவாலாகவே உள்ளன. அமித்ஷா போன்ற தலைவர்கள் இந்த மாநிலங்களில் நிலவும் சூழலை கூர்ந்து கவனித்து வருகின்றனர். குறிப்பாக வங்கதேச எல்லை பகுதிகளில் நிலவும் சூழல் மற்றும் அங்குள்ள இந்துக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள், மேற்கு வங்கத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஹேமந்த் விஸ்வ சர்மா அசாமில் பின்பற்றும் உத்திகள் மிகத் தெளிவானவை; “எங்களுக்கு முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை” என்று அவர் வெளிப்படையாக கூறுவது, இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மிகப்பெரிய அரசியல் மிரட்டல். இது போன்ற அதிரடி மாற்றங்கள் இந்தியாவின் வடகிழக்கு மற்றும் எல்லை மாநிலங்களில் பாஜகவை பலப்படுத்தி வருகின்றன.
மேற்குவங்கத்தை அடுத்து தமிழ்நாடும் பாஜகவின் பட்டியலில் உள்ளது. என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வருகிறதோ இல்லையோ, திமுகவை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்பதில் அமித்ஷா தீவிரமாக உள்ளார். என்.டி.ஏ அல்லது தவெக ஆட்சி அமைக்க வேண்டும், எதிர்க்கட்சியாகவும் இருக்க வேண்டும். திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திமுகவே இருக்க கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் திட்டம் நிறைவேறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
