தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்ட சில காலத்திலேயே, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன் போன்ற முக்கிய பிரமுகர்கள் கட்சியை விட்டு விலகி த.வெ.க.வில் இணைவது, தமிழக அரசியலில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வில் செல்வாக்குள்ள இன்னும் சில முக்கிய தலைவர்களும், பிற கட்சிகளை சேர்ந்த பிரபலங்களும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாவல் காரணமாக, மக்கள் செல்வாக்குள்ள நடிகரான விஜய்க்கு, அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கிடைப்பதால், த.வெ.க.வுக்கு அரசியல் அனுபவம் மற்றும் அமைப்பு ரீதியான பலம் கிடைக்கிறது. இவர்களுடன் கீழ்மட்ட தொண்டர்களின் ஆதரவும் வருவதால், த.வெ.க.வின் அடித்தள கட்டமைப்பு வேகமாக வலுப்பெற்று வருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகளுக்கு ஒரு வலுவான மாற்றாக த.வெ.க. உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. வலுவான ஒரு கூட்டணியை அமைத்து, இரு பெரிய கட்சிகளுக்கும் சவால் அளிக்கும் சக்தியாக மாற வாய்ப்புள்ளது.
த.வெ.க.வின் இந்த திடீர் எழுச்சி, குறிப்பாக அ.தி.மு.க.வின் வாக்குகளை உடைத்து அதன் பலத்தை குறைக்கும் அபாயம், ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு மறைமுகமான அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. த.வெ.க.வின் வளர்ச்சியை தடுக்கவும், அதன் கவனத்தை திசை திருப்பவும் தி.மு.க. ஒரு புதிய அரசியல் சதுரங்கத்தை விளையாட தயாராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க.வின் எதிர் வியூகமாக, செங்கோட்டையன் போன்ற தலைவர்களை த.வெ.க. ஈர்க்கும் நிலையில், விஜய்யின் த.வெ.க.வுக்கு இணைய இருக்கும் பிரபலங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுக்க திட்டமிடலாம். இது த.வெ.க.வில் செங்கோட்டையன் போன்ற பிரபலங்கள் செல்வதை தடுத்து, திராவிட முகாமிற்குள் கொண்டுவர உதவும் ஒரு யுக்தியாக பார்க்கப்படுகிறது. அத்துடன், த.வெ.க.வுடன் கூட்டணீ பேச்சுவார்த்தை நடத்தும் மற்ற கட்சிகளின் தலைவர்களிடம் பேசி, அந்த கட்சிகளை தி.மு.க. கூட்டணிக்கு இழுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
மொத்தத்தில், செங்கோட்டையனின் இந்த முக்கிய நகர்வு அ.தி.மு.க.வின் பலவீனத்தை மட்டுமல்லாமல், த.வெ.க.வின் பலமான எழுச்சியையும் காட்டுகிறது. இந்த வளர்ச்சியை தடுக்க ஆளும் தி.மு.க. இனிவரும் மாதங்களில் என்னென்ன ‘அரசியல் சதுரங்க காய்களை’ நகர்த்த போகிறது, அதற்கு தவெக தரப்பின் ரியாக்சன் என்ன என்பதே தமிழக அரசியல் வட்டாரத்தின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
