தவெக ஒரு உதிரிக்கட்சி.. அதிமுக விமர்சனம்.. கூட்டணி இல்லை என்பது உறுதியானால் விஜய்யை வெளுக்க திட்டம் என தகவல்.. எங்கள் எம்ஜிஆரை நீ சொந்தம் கொண்டாடுவியா? பொங்கி எழுந்த அதிமுக நிர்வாகிகள்.. விஜய் தரப்பு பதிலடி கொடுக்குமா? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்..!

தமிழக அரசியல் களத்தில் அண்மை காலமாகவே, அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் மறைமுக பனிப்போர் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, த.வெ.க-வை…

vijay vs eps

தமிழக அரசியல் களத்தில் அண்மை காலமாகவே, அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் மறைமுக பனிப்போர் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, த.வெ.க-வை நேரடியாக விமர்சிப்பதை தவிர்க்குமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கறாரான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதும், சில மூத்த நிர்வாகிகள் பதிலடி கொடுக்க துடிப்பதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்போ, தேர்தலுக்கு பின்போ ஆட்சி அமைக்க தவெக உதவி தேவைப்படும் என்ற கோணத்தில் எடப்பாடி பழனிசாமி தவெகவை விமர்சிக்காமல் அமைதி காக்கிறார். ஆனால் விஜய்யோ, திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என அதிமுகவை சீண்டுகிறார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஆலோசனை கூட்டங்களின்போதே, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். “த.வெ.க-வை எந்த இடத்திலும் விமர்சிக்க வேண்டாம்” என்பதே அந்த உத்தரவாகும். விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில், அவரை நேரடியாக தாக்கிப் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதில் ஈ.பி.எஸ். உறுதியாக இருந்திருக்கிறார். ஒருவேளை, விஜய்யை விமர்சித்தால், அது தேவையில்லாத எதிர்வினையை உண்டாக்கி, ஆளும் தி.மு.க.வுக்கு சாதகமாகிவிடும் என்ற அரசியல் நிலைப்பாடு இதன் பின்னால் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஈ.பி.எஸ்-ஸின் இந்த கறார் உத்தரவு இருந்தபோதிலும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். இதற்கு அவர், “நம்ம தலைவர் எம்.ஜி.ஆரை விஜய் சொந்தம் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்” என்பதையும், “வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் இடையேதான் உண்மையான போட்டி என்று பேச ஆரம்பித்துவிட்டார்” என்பதையும் காரணமாக முன்வைத்துள்ளார். இந்த இரு காரணங்களுக்காகவாவது, த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர் பிடிவாதம் காட்டியுள்ளார்.

ஜெயக்குமார் பதிலடி கொடுக்க துடித்தபோதும், எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, விஜய்யை நேரடியாக தாக்கி ஏதும் பேசிவிட வேண்டாம் என்று மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். ஈ.பி.எஸ்-ஸின் இந்த தடையால், ஜெயக்குமார் நேரடியாக விஜய்யை விமர்சிக்காமல், பொதுக்குழுவில் தனது கருத்தை வேறு விதமாக பதிவு செய்துள்ளார். அவர், “வரும் தேர்தலில் தி.மு.க – அ.தி.மு.க இடையேதான் போட்டி. உதிரிகளை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை…” என்று பேசியிருக்கிறார்.

இந்தக் கருத்தானது, மறைமுகமாக ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஒரு வலிமையற்ற, “உதிரிக் கட்சி”யாக கருதப்படுவதை வெளிப்படுத்துவதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலம், விஜய்யின் கட்சியை போட்டியாக கருதவில்லை என்ற அ.தி.மு.க-வின் நிலைப்பாடு வலுவாக பதியவைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் அமைதி காக்க ஈ.பி.எஸ். உத்தரவிட்டிருந்தாலும், மறுபுறம் மறைமுக விமர்சனம் மூலம் த.வெ.க. மீதான தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

தற்போதைக்கு அமைதி காக்க அ.தி.மு.க. தலைமை முடிவெடுத்திருந்தாலும், எதிர்காலத்தில் நிலைமை மாறலாம் என்றே தெரிகிறது. அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, வரும் தேர்தலில் த.வெ.க-வுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியானால், அப்போது அக்கட்சியை நேரடியாகத் தாக்கி விமர்சிக்கும் முடிவுக்கும் அ.தி.மு.க. தலைமை வந்திருக்கிறதாம். அ.தி.மு.க.வை நேரடியாக விமர்சிப்பதன் மூலம், த.வெ.க.வும் தன்னை பிரதான எதிர்க்கட்சியாக முன்னிறுத்த முயற்சிக்கும் என்பதால் தவெகவையும் வெளுக்க அதிமுக பேச்சாளர்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.