அதிமுக கூட்டணி என்றால் 50 தொகுதிகள்.. தனித்து போட்டி என்றால் 70 தொகுதிகளை மட்டும் தேர்வு செய்து போட்டி.. முதலில் தவெக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும்.. முதல் தேர்தலில் 50 எம்.எல்.ஏக்கள்.. அடுத்த தேர்தலில் ஆட்சி.. விஜய் இதை தான் செய்ய வேண்டும்..!

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளது. திரையுலகில் அவருக்கு இருக்கும் அசுர பலம் அரசியலிலும் பிரதிபலிக்குமா என்ற கேள்வி இருக்கும் சூழலில்,…

vijay eps

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளது. திரையுலகில் அவருக்கு இருக்கும் அசுர பலம் அரசியலிலும் பிரதிபலிக்குமா என்ற கேள்வி இருக்கும் சூழலில், அரசியல் நிபுணர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில், அவர் தனித்து நிற்க வேண்டுமா அல்லது பாரம்பரிய கூட்டணிக்குள் இணைய வேண்டுமா என்ற விவாதம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் முதற்கட்டமாக அதிகாரத்தை அடைந்து, சட்டமன்றத்திற்குள் வலுவாக பிரதிநிதித்துவத்தை பெற, ஒரு அடிப்படை அணுகுமுறை அவசியமாகிறது.

தமிழக அரசியல் களம் திராவிட கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பலமான கட்டமைப்புக்குள் புதிதாக நுழையும் ஒரு கட்சிக்கு, ஒரு பெரிய கூட்டணியில் இணைவது உடனடி வெற்றியை ஈட்டி தரும் எளிய வழியாகும்.

அ.தி.மு.க. தலைமையிலான ஒரு வலுவான கூட்டணியில் த.வெ.க. இணைந்தால், கணிசமான எண்ணிக்கையிலான இடங்களை கோர முடியும். தமிழகத்தின் தேர்தல் வரலாற்றை பார்த்தால், பெரிய கட்சிகளின் வாக்கு வங்கியோடு, விஜய்யின் ‘புதிய வாக்கு வங்கி’ இணையும்போது, 50 முதல் 60 தொகுதிகளில் இருந்து 40 முதல் 50 சட்டமன்ற உறுப்பினர்களை தவெக எளிதில் வெல்ல முடியும்.

முதற்கட்டமாக சட்டமன்றத்திற்குள் அதிக உறுப்பினர்களை அனுப்புவது, கட்சியின் குரலை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அரசு அமைக்கும் அதிகாரத்திலும் பங்கெடுக்க வாய்ப்பளிக்கும். அதிகாரத்தில் பங்கு பெறுவதுதான் ஒரு புதிய கட்சியை விரைவாக பலப்படுத்தவும், தொண்டர்களை உத்வேகப்படுத்தவும் சிறந்த வழியாகும்.

ஒரு புதிய கட்சி தனியாக இருக்கும்போது, ஆளுங்கட்சி அல்லது மற்ற பெரிய கட்சிகள் பல்வேறு வழிகளில் இடையூறுகளை ஏற்படுத்த முயற்சிப்பது இயற்கை. ஒரு பலமான கூட்டணியின் அங்கமாக செயல்படும்போது, இத்தகைய அரசியல் அழுத்தங்கள் கணிசமாக குறையும்.

அரசியல் என்பது கொள்கை இலக்குகளை தவிர்த்து, அடிப்படை பலத்தைப் பொறுத்தது. ஒரு கட்சிக்கு முதலில் 40 முதல் 50 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தால், அவர்கள் மூலமாகத் தங்கள் கொள்கைகளை சட்டமன்றத்தில் உரக்க பேசவும், மாவட்டங்கள் தோறும் கட்சி அமைப்பை வலிமைப்படுத்தவும் முடியும். இதுவே நீண்ட கால வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமையும்.

விஜய், கூட்டணி வேண்டாம்; தனித்து நின்றுதான் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக இருந்தால், அவர் ‘அனைத்து தொகுதிகளிலும்’ போட்டியிடும் அணுகுமுறையை தவிர்க்க வேண்டும். இது அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு எதிராக வாக்குகளை பிரித்து, தனது பலத்தையும் விரயமாக்கி, இறுதியில் கமலஹாசன் போன்ற நிலையை ஏற்படுத்தக்கூடும். இதற்கு பதிலாக, ஒரு உத்தி அமைத்து தனித்து போட்டி அவசியம்.

அதாவது தமிழகத்தில் த.வெ.க.வுக்கு மிகவும் சாதகமான, இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகள் அதிகம் உள்ள, சமூக சமன்பாடுகள் தங்களுக்கு பொருந்தக்கூடிய சுமார் 70 தொகுதிகளை மட்டுமே ஆரம்பகட்டத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 70 தொகுதிகளில் மட்டும் தனது முழு பிரச்சார பலம், நிதி பலம் மற்றும் நட்சத்திர பலம் அனைத்தையும் குவித்து, குறைந்தபட்சம் 30 முதல் 40 எம்.எல்.ஏ.க்களை வெல்வதே முதல் இலக்காக இருக்க வேண்டும்.

இந்த 30 – 40 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்றத்திற்குள் நுழைவது, ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை குறிக்கும். சட்டமன்றத்திற்குள் ஒரு வலுவான குழு இருந்தால், ஆளுங்கட்சிக்கு சவால் விடுவதோடு, அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தமிழகம் முழுவதும் தனது கட்சியை பலப்படுத்தவும், 2031 தேர்தலுக்கு தனியாக போட்டியிட தயாராவதற்கும் உறுதியான தளத்தை பெறலாம்.

அகிலேஷ் யாதவ், விஜயகாந்த், கமல்ஹாசன் என பலரும் ஆரம்பத்தில் தனித்து நின்று அதிகாரத்தை பெற முடியாமல் பின்னர் கூட்டணிக்கு சென்ற வரலாறே தமிழக அரசியலில் நிரந்தர விதி. தனியாக தான் போட்டியிடுவேன் கூட்டணி வைக்க மாட்டேன் என பிடிவாதமாக இருக்கும் சீமானால், தனது கட்சியின் சார்ப்பில் கடந்த 15 வருடங்களில் ஒரு எம்.எல்.ஏவை கூட சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியவில்லை. இதுதான் எதார்த்தம்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தனது எதிர்காலத்தை நோக்கிய முதல் அடியை, உடனடியாக சட்டமன்றத்திற்குள் நுழைந்து, அதிகாரத்தில் பங்கெடுத்து கட்சியை பலப்படுத்துவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். 2026-இல் முதலில் எம்.எல்.ஏ.க்களை உருவாக்கி, அதிகாரத்தை பெறுவதன் மூலமே, 2031-இல் ஆட்சிக் கனவை நனவாக்க முடியும் என்பதே அரசியல் நிபுணர்களின் பார்வையாக உள்ளது.