சென்னையின் முக்கிய பகுதிகளில் இருக்கும் அடையார் பஸ் டிப்போ விரைவில் மிகப்பெரிய நவீன வணிக வளாகமாக மாற இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடையார் பஸ் டிப்போ விஸ்தாரமான இடமாக இருப்பதால் இதனை பேருந்து நிறுத்தத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் வணிக வளாகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக 993 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பெரிய வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
புதியதாக அமையவிருக்கும் வணிக வளாகத்தில் முதல் இரண்டு மாடிகள் பேருந்து நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அதன்பிறகு உள்ள ஏழு மாடிகளில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், விளையாட்டு அரங்குகள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2026 மார்ச்சில் முடிவடையும் எனவும் கூறப்படுகிறது.
மாதவரம் – சிப்காட் மெட்ரோ ரயில் தடத்தில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் அருகிலேயே இந்த வணிக வளாக அமையவிருப்பதால் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு வளாகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.