ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் சமீபத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது என்பதும் 275 பேர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 900 பேர்கள் வரை காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விபத்து இந்தியாவை மட்டுமின்றி உலகையே உலுக்கிய நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த பெற்றோர்களை குழந்தைகளின் கல்விச் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய போது ‘ஒடிசா ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி செலவு குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அந்த செலவு முழுவதையும் அதானி குழுமம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிப்பது அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி எதிர்காலத்தை வழங்குவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
அதானியை அடுத்து மேலும் சில தொழிலதிபர்கள் பெற்றோரை ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த பகுதியில் இரவு பகலாக மீட்பு பணிகள் நடந்த நிலையில் தற்போது மீட்ப பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு சேதம் அடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை மறுநாள் முதல் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில்கள் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.