நடிகை கஸ்தூரி அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியிருந்ததாக அவர்மேல் புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதனால் தான் பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் கஸ்தூரி.
அண்மையில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கஸ்தூரி பங்கேற்றிருந்தார். அப்போது அதில் அவர் பேசும் போது, 300 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கே யார் இருக்கிறார்கள்? அதனால் தான் இங்க தமிழக முன்னேற்றக் கழகம் என யாரும் வைக்க முடியவில்லை” என்று பேசியிருந்தார்.
இதனால் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களைத் தெரிவித்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் காவல் துறையினர் அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்தனர்.
தொடர்ந்து வந்த எதிர்ப்புக் குரல்.. தாதா லாரன்ஸ் பிஷ்னோய் டி-சர்ட்டை நிறுத்திய மீஷோ
இந்நிலையில் காவல் துறையினர் சம்மனுடன் இன்று காலை கஸ்தூரி வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் இல்லாதிருந்தார். மேலும் சம்மனை வாங்காமல் போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து பின்வாசல் வழியாக தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது தொலைபேசி எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சம்மனை அவர் வீட்டில் போலீசார் ஒட்டிச் சென்றனர். இந்நிலையில் அவர் தலைமறைவாகியிருக்கிறாரா என்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது. மேலும் காவல் துறையினரும் நடிகை கஸ்தூரியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்செய்தி பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.