பாலிவுட் திரையுலகில் ஒரே ஒரு படமே நடித்த நடிகை இன்று ரூ.50,000 கோடி சொத்து மதிப்பை கொண்டவராக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கான் நடித்த *”ஸ்வதேஷ்” என்ற திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ள ஷாருக்கான், இந்த படத்தில் ஒரு சாதாரண மனிதன் கதாபாத்திரத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக இந்த படம் பாராட்டப்பட்டாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ஜோஷி நடித்திருந்தார். மாடல் அழகியாக இருந்த காயத்ரி, இந்த படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், காயத்ரியின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததால், அவர் பாலிவுட்டில் மேலும் முன்னேறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் திடீரென விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்து, சினிமா உலகில் இருந்து விலகிவிட்டார்.
இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் ஒருவரான விகாஸ் ஓபராய், “ஓபராய் கன்ஸ்ட்ரக்ஷன்” என்ற நிறுவனத்தின் தலைவராக செயல்படுகிறார். இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றை நடத்தும் இவரின் சொத்து மதிப்பு சுமார் 50,000 கோடி ரூபாய் ஆகும்.
விகாஸ் ஓபராயுடன் திருமணம் செய்து, இரண்டு மகன்களை பெற்ற பிறகு, காயத்ரி தற்போது முழுமையாக தனது கணவரின் வியாபாரத்திற்கு உதவி செய்து வருகிறார். சினிமாவில் இருந்து ஒரே ஒரு படத்திலேயே விலகிவிட்டாலும், இன்னும் அவருக்கு சில திரை உலகத் தோழிகள் உள்ளனர். நடிகை சோனாலி பிந்த்ரே, ஹ்ரித்திக் ரோஷன் முன்னாள் மனைவி சுசன்னே கான் ஆகியோர் உள்பட சிலர், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள்.
இன்றும், 20 ஆண்டுகளாக சில திரை உலக பிரபலங்களுடன் அவர் நட்பில் இருப்பதாக கூறப்படுகிறது.