நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன. நடிகர் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதகஜராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் கை நடுங்கிக் கொண்டே பேசினார்.
மேலும் அவரது தோற்றமும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் விஷாலின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. மேலும் விஷால் குறித்து பாடகி சுசித்ராவும் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் விஷால் குறித்துப் பரவும் வதந்திகளுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த சில நாட்களாக நடிகரும், தயாரிப்பாளரும் மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சிந்தனையாளருமான எங்கள் தலைவர் விஷால் அவர்களின் உடல் நிலை குறித்து பலர் பல்வேறு அவதூறுகளையும் தங்களுக்கு தோன்றிய கதைகளையும், கற்பனைகளையும் ஊடகங்கள் என்ற பெயரால் விளம்பரம் தேடி வரும் ஒரு சில விஷம எண்ணம் கொண்ட நபர்களால் பொய்யான செய்தியை மட்டும் பரப்பி வருகின்றனர்.
தற்போது இதனை எழுதும் நோக்கம் அவர்களுக்கு பதில் கூற வேண்டும் என்ற எண்ணம் இல்லை, மாறாக இவ்வளவு பொய்களையும், வதந்திகளும் பரப்பி அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாமல் அதே சமயத்தில் எங்கள் தலைவர் விஷால் மீது பாசம் கொண்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மக்களுக்கும் அவர் மீது அளவில்லா அன்பு கொண்ட ரசிகர்கள், மக்கள் நல இயக்கத்தின் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.
விஷால் அவர்களுக்கு உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பும் “ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள்” நம்பிக்கைமிக்க நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறாக பரப்பி வருகின்றனர்கள் அவர்களை எப்போதும் மக்கள் நிச்சயம் அடையாளம் கண்டு கோமாளியாக்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. எங்களின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கு நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க தயாராக இல்லை அதே வேளையில் இன்று எங்கள் தலைவர் திரு.விஷால் அவர்களுக்கு ஏற்பட்ட அவதூறுகள், கற்பனை கதைகளைப் பரப்புவது போல் இனி வரும் காலங்களில் வேறு எவருக்கும் நடைபெறக் கூடாது என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.