கோடைகால சலுகையாக, ஆன்லைன் மூலம் ஏசி ஆர்டர் செய்தால், பத்து நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், மொபைல் போன் உள்ளிட்ட சில எலக்ட்ரானிக் பொருட்கள், ஆர்டர் செய்த பத்து நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் நிலையில், தற்போது ஏசி போன்ற பெரிய பொருட்களை பத்து நிமிடத்தில் டெலிவரி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டாடாவின் க்ரோமோ, ஏசி போன்ற பெரிய பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்யும் சேவையை பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. இன்னொரு நிறுவனம், மாலை 4 மணிக்கு ஆர்டர் செய்தால் அதே நாளில் டெலிவரி செய்யப்படும் என்றும், தனது ஏசி விற்பனையை அதிகரிப்பதற்காக அறிவித்தது. ஆனால் தற்போது, Blinkit நிறுவனம், “ஏசி ஆர்டர் செய்த பத்தே நிமிடத்தில் வீட்டில் டெலிவரி செய்கிறோம்” என்று அறிவித்துள்ளது.
இது குறித்து, Blinkit நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனது சமூக வலைதளத்தில், “பத்து நிமிடங்களில் ஏசியை டெலிவரி பெறுங்கள்! இந்த கோடைக்காலத்தில் எங்களுடன் எங்கள் நிறுவனத்தில் ஏசி ஆர்டர் செய்தால், பத்தே நிமிடத்தில் டெலிவரி செய்ய உள்ளோம். முதலில் டெல்லி பகுதியில் இந்த டெலிவரி சேவையை தொடங்கி விட்டோம். பிற பகுதிகளிலும் விரைவில் இந்த சேவை கிடைக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஜொமேட்டோ அதிகாரி கூறுகையில், “ஏசியை 10 நிமிடத்தில் டெலிவரி செய்வது என்பது முடியாது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், மார்ச் மாதத்தில், மக்கள் தினமும் 15,000 ஏசி ஆர்டர் செய்யத் தொடங்கி விட்டனர். எனவே, வேகமாக டெலிவரி செய்வது அவசியம் என்ற கருத்தில் கொண்டு, இதனை சவாலாக ஏற்று உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள், இந்த கோடை வெப்பத்தின் காரணமாக அதிகளவில் ஆர்டர்கள் பெற்று வரும் நிலையில், அவற்றை உடனடியாக டெலிவரி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பாக, ஒப்புக்கொண்டபடி, ஏசியை 10 நிமிடத்தில் டெலிவரி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.