அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த இளம் வீரராக தனது பேட்டிங் மூலம் கவனம் ஈர்த்திருந்தாலும் சர்வதேச போட்டிகள் என வரும்போது அதிகமாக தடுமாற்றத்தை தான் கண்டு வந்தார். இவர் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் டக் அவுட்டாகி இருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் சதமடித்து அனைவரையும் அசர வைத்திருந்தார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடி சதமடித்த அபிஷேக் ஷர்மா, அதன் பின்னர் ரன் சேர்க்கவே கடுமையான தடுமாற்றத்தை கண்டிருந்தார். அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டிக்கு முன்பாக 7 இன்னிங்ஸ்களில் வெறும் 70 ரன்களை தான் அபிஷேக் ஷர்மா எடுத்திருந்தார்.
யுவராஜ் சிங் வழியில் அபிஷேக்
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா பல சர்வதேச வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி லைனுக்கு வெளியே சிதறடித்திருந்தார். ஆனால் சர்வதேச அரங்கில் அவரால் அதை செய்ய முடியாமல் திணறி வர இதற்கு ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்களுக்கே இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
இதனைத் தாண்டி இன்னொரு பக்கம் யுவராஜ் சிங்கின் வழிகாட்டுதலில் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவருக்குப் பின் சிறந்த ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்ற பெயரையும் எடுப்பார் என்று அனைவரும் கருதினர். ஆனால் தனது குருவை போல இல்லாமல் டி20 போட்டிகளில் தடுமாறி வந்ததால் யுவராஜ் சிங் மீதும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதனிடையே தான் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் ஷர்மா, 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். இதில் மூன்று ஃபோர்களும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இத்தனை நாட்களாக பேட்டிங்கில் தடுமாறி வந்த அபிஷேக் ஷர்மா தற்போது அதிரடியான கம்பேக் கொடுத்துள்ளதால் இதை வரும் போட்டிகளிலும் தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சரித்திரம் படைத்த அபிஷேக் ஷர்மா
இதற்கிடையில் தான் யுவராஜ் சிங்கிற்குப் பிறகு டி20 போட்டிகளில் முக்கியமான ஒரு உயரத்தை தொட்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் முதல் இரண்டு முறை 50 ரன்கள் கடந்த போது அந்த இரண்டு முறையும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் தொட்டது இந்திய வீரராக யுவராஜ் சிங் மட்டும்தான்.
அவருக்குப் பிறகு இரண்டாவது இந்திய வீரராக தனது டி20 சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் முதல் இரண்டு முறை 50 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்தபோது அதனை 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த வீரராக அபிஷேக் ஷர்மா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.