158 ஆண்டுகள் பழமையான பிரிட்டன் போக்குவரத்து நிறுவனமான KNP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை ஒரு ரான்சம்வேர் கும்பல் தாக்கியதில், 700க்கும் மேற்பட்டோர் வேலை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹேக்கர்கள் ஒரு ஊழியரின் கடவுச்சொல்லைக் யூகித்து நிறுவனத்தின் கணினி அமைப்பை அணுகி, தரவுகளை என்க்ரிப்ட் செய்து, உள் அமைப்புகளை முடக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. KNP நிறுவனத்தின் இயக்குனர் பால் அபோட், இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு இல்லாத பாஸ்வேர்டு தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட ஊழியரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.
இந்த போக்குவரத்து நிறுவனம் சுமார் 500 லாரிகளை, குறிப்பாக ‘நைட்ஸ் ஆஃப் ஓல்ட்’ (Knights of Old) என்ற பெயரில் இயக்கி வந்தது. ஆனால் இப்போது ரான்சம்வேர் தாக்குதலுக்கு நிறுவனம் பலியாகிவிட்டது. ஹேக்கர்கள் KNP இன் அமைப்பிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலை பெற்று, அதன் தரவுகளை என்க்ரிப்ட் செய்து, ஊழியர்கள் முக்கியமான வணிக தகவல்களை அணுகுவதை தடுத்தனர். மீண்டும் அணுகலை தர, ஹேக்கர்கள் ஒரு பெரிய தொகையை கோரியதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் தொகையை போக்குவரத்து நிறுவனம் குறிப்பிடவில்லை என்றாலும், நிபுணர்கள் அது இந்திய மதிப்பில் சுமார் 58 கோடிக்கும் மேல் இருக்கலாம் என்று மதிப்பிட்டனர். துரதிர்ஷ்டவசமாக, KNP அந்த தொகையைச் செலுத்த முடியாததால், முழு தரவு இழப்பு ஏற்பட்டு, இறுதியில் நிறுவனம் வீழ்ச்சியடைந்தது.
இதிலிருந்து முன்னணி நிறுவனங்கள் கற்று கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் தங்கள் அமைப்புகளையும், தங்கள் வணிகங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் (NCSC) தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன் கூறுகிறார்.
தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் (NCA) ஒரு குழுவின் தலைவர் சூசன் கிரிம்மர் கூறுகையில், ஹேக்கிங் செய்து மிரட்டி பணம் பறிப்பது சுலபமாகவும் லாபகரமானதாகவும் இருப்பதால் இந்த மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த போக்கு தொடர்ந்தால், பிரிட்டனில் ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு இது மிக மோசமான ஆண்டாக மாறும் என்று எச்சரிக்கிறார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
