நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வட இந்தியக் கொள்ளையர்கள் கேரளாவில் ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தினைத் திருடிக் கொண்டு செல்லும் போது போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஒருவன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் மற்ற 6 பேரும் கைது செய்யப்பட்டனர். திரன் அதிகாரம் ஒன்று சினிமா பாணியில் தமிழகத்தையே பரபரப்பாக்கிய இச்சம்பவத்தில் சிறப்பாகச் செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இதேபோன்று பஞ்சாப் மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக கொள்ளையர்கள் பகல் நேரங்களில் நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பர். ஆனால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் பட்டப்பகலில் வீடு புகுந்த கொள்ளையர்களை பெண் விரட்டியிருக்கிறார். அப்பெண் வீட்டிற்கு முகமூடி அணிந்த நிலையில் காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிக்கின்றனர். இதனை அறிந்த அந்த வீட்டுப் பெண் உடனே உஷாராகி வேமாக கதவினை அடைக்க ஓடுகிறார்.
அதற்குள் கொள்ளையர்கள் வீட்டுக் கதவினை நெருங்க அவர்களை உள்ளே வரவிடாமல் ஒற்றை ஆளாகப்போராடி தடுத்து நிறுத்துகிறார். பின்னர் அருகிலிருந்த ஷோபாவை இழுத்து கதவிற்குப் பின்புறம் வைத்து கூச்சலிடுகிறார். அப்பெண் கூச்சலிட்டதைக் கண்டதும் கொள்ளையர்கள் மீண்டும் வந்த வழியே தப்பித்தால் போதும்டா சாமி என்று அவ்விடத்தினை விட்டு வெளியேறினர்.
யாரும் இல்லாத வீட்டில் தனி ஒற்றை ஆளாக 3 கொள்ளையர்களைச் சமாளித்து அவர்களை விரட்டிய அப்பெண்ணின் வீரச் செயலுக்கு நாடுமுழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெண்கள் எதற்கும் பணியாமல் துணிந்து எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்கு அடையாளமாக இப்பெண்ணின் வீரம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.