சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதன்காரணமாக நாளை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இந்த தாழ்வு பகுதியானது, தமிழக நிலப்பகுதியை கடந்து லட்சத்தீவு, மாலத்தீவு அருகே நகர்ந்துவிட்டதால் தற்போது மழை குறைந்துள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், தென்காசி மாவட்டம் கடனா அணை பகுதியில் 26 செ.மீட்டர் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 23 செ.மீட்டர், நாலுமுக்கு பகுதியில் 22 செ.மீட்டர், தூத்துக்குடி விமான நிலையத்தில் 21 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் காக்காச்சியில் 19 செ.மீட்டர், மாஞ்சோலையில் 18 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் லட்சத்தீவு, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றும் அதே பகுதிகளில் நிலவியது. இது, இன்று மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் இருப்பதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, மேலும் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 2 நாட்களில் நகரும். இதன்காரணமாக, நாளை (திங்கட்கிழமை) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது
மேலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை வரை பெய்யும். இதன்காரணமாக, அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் 17-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வருகிற 18-ந்தேதி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்த வானிலை ஆய்வு மையம், அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.