தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய நகர்வில், இதுவரை காணாத பல புதிய கூட்டணி சாத்தியக்கூறுகள் மற்றும் சிக்கல்கள் உருவெடுத்துள்ளன. நீண்டகாலமாக பெரிய கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த கூட்டணி அரசியல், தற்போது கணிக்க முடியாத பல முனைகளில் விரிவடைந்து வருகிறது.
திமுக கூட்டணியில் சலசலப்பு?
ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் வெளியேற வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. கூட்டணிக்குள் நிலவும் சில அதிருப்திகள் மற்றும் வருங்கால அரசியல் கணக்குகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிமுக – பாஜக பிடிமானம் மற்றும் விஜயின் தயக்கம்:
திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் வாய்ப்புள்ள இந்த கட்சிகள், மறுபுறம், பாஜக கூட்டணியில் இருக்கும் வரை அதிமுக கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுகின்றன. அதிமுக, பாஜகவை தனது கூட்டணியிலிருந்து வெளியேற்றுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிடியில் எடப்பாடி பழனிசாமி வசமாகச் சிக்கிக்கொண்டதாகவும், அவர் பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வாய்ப்பில்லை என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ குறித்து சில கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. விஜய்யின் உண்மையான வாக்கு சதவீதம் எவ்வளவு என்று தெரியாமலேயே, பல ஆண்டுகளாக அரசியல் நடத்தி வரும் கட்சிகள், ஒரு நடிகரை தலைமையாக ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு நடிகரின் பின்னால் செல்வது குறித்த ஒரு பார்வை உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான புதிய அணி சாத்தியமா?
திமுக கூட்டணியும் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலை, அதேசமயம் புதிய அதிமுக மற்றும் தவெக கூட்டணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், திமுகவில் இருந்து வெளியேறும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையலாம் என்று கூறப்படுகிறது. மேலும், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சிகளும் இந்த புதிய கூட்டணிக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டிகள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய கூட்டணி ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக அரசியல் களம் அடுத்த சில மாதங்களில் மேலும் பல திருப்பங்களைக் காணும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி என்பதெல்லாம் கனவில் கூட நடக்காது என்றும், இப்படி ஒரு கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசியலை ஆழமாக கணித்து வரும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
