இனியும் எடப்பாடி யோசிக்க கூடாது.. எதிர்க்கட்சி தலைவருக்கு பதில் துணை முதல்வர் எவ்வளவோ மேல்.. விஜய் கூட போவது தான் நல்லது.. பாரம்பரியம் எல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது..!

கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே, பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு ஒரே காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு கிடைக்கும், தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு…

eps vs vijay

கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே, பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு ஒரே காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு கிடைக்கும், தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் வருவார்கள் என்ற நம்பிக்கைதான். ஆனால், கடைசிவரை தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு கட்சி கூட வரவில்லை என்பதும், சிறுபான்மையினர் ஓட்டும் கிடைக்கவில்லை என்பதும் அவருக்கு ஏமாற்றத்தை தந்ததோடு, தேர்தல் முடிவுகள் ஜீரோவாக இருந்தது. அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதை அடுத்துதான் தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைந்துள்ளார். இதுவும் அவர் எடுத்த தவறான முடிவுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் ஒரு சில வாக்கு சதவீதம் அதிகரிக்குமே தவிர, வெற்றிக்கு தேவையான வாக்குகள் கிடைக்காது என்றும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் வராது என்பதும் குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வின் வலிமையான கூட்டணியை முறியடிக்க இந்த வாக்கு சதவீதம் போதாது என்பது தான் நிதர்சனமான உண்மை. போதாக்குறைக்கு விஜய் அ.தி.மு.க. ஓட்டையும், பா.ஜ.க. ஓட்டையும் கபளீகரம் செய்கிறார் என்றும், எனவே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக உருவாகாது என்றுதான் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவதால், ஒன்று தி.மு.க. ஆட்சியை பிடித்துவிடும் அல்லது ஏதாவது அதிசயம் நடந்து தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்துவிடும். மும்முனைப் போட்டி என்றால், அதில் எதிர்க்கட்சியாக கூட வருவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு குறைவு என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை ஏற்றதிலிருந்து இன்றுவரை ஒரு தேர்தலில் கூட அவர் வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. என்பது பாரம்பரியமான கட்சி என்பது உண்மைதான். ஆனால், இப்போது அந்த பாரம்பரியத்தைத் தொலைத்துவிட்டு அடையாளம் இல்லாமல் இருக்கிறார்கள். இரட்டை இலைக்காக ஓட்டுப் போட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஏனெனில், வாக்காளர்கள் தற்போது சுதாரித்துவிட்டார்கள். எனவே, இனியாவது எடப்பாடி பழனிசாமி சுதாரிக்க வேண்டும். பா.ஜ.க.வை கூட்டணியிலிருந்து துரத்தி அடித்துவிட்டு, விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும்.

விஜய், எடப்பாடி பழனிசாமி என இருவரும் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி அல்லது விஜய்க்கு முதல்வர் பதவி, எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பதவி என்றாவது பேசிக்கொள்ளலாம். ஏனெனில், மும்முனை போட்டியில் எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்கும் என்பது உறுதியில்லாத நிலையில், துணை முதல்வர் பதவி எவ்வளவோ மேல் தான் என்பதும், அவர் தனது கட்சி பதவியையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கிய எதிரியான தி.மு.க.வையும் வீழ்த்திவிடலாம் என்பதால், ஒரே கல்லில் இரண்டு அல்லது மூன்று மாங்காய்கள் அடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு உள்ளது.

ஆனால், “50 ஆண்டு கால கட்சி நாங்கள், நேற்று கட்சி ஆரம்பித்த விஜய்யுடன் செல்வதா?” என ஈகோ பார்த்தால், கண்டிப்பாக அ.தி.மு.க. கூட்டணிக்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும் என்றும், அதுமட்டுமின்றி அ.தி.மு.க.வை காலப்போக்கில் மக்கள் மறந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பா.ஜ.க. அ.தி.மு.க.வை கபளீகரம் செய்து, பா.ஜ.க. மூன்றாவது இடத்தை பிடித்துவிடும்.

எனவே, தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி விஜய்யுடன் கூட்டணி வைத்து, முதல் கட்டமாக தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும். “நமக்கு முதல்வர் பதவி கிடைக்கிறதோ இல்லையோ, ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” என்ற நோக்கம்தான் இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்க வேண்டும் என்றும் அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமியும் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டார். காலம் இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அடுத்தடுத்து அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.