பட்டப்பகலில் பரபரப்பான கிண்டி பன்னோக்கு மருத்துவமனை.. போராட்டத்தில் குதித்த அரசு மருத்துவர்கள்.. நடந்தது என்ன?

By John A

Published:

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் ஒருவர் பணியில் இருந்த அரசு மருத்துவரை குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் துறை பிரிவில் பணிபுரிந்து வருபவர் மருத்துவர் பாலாஜி. வழக்கம் போல் பணியில் இருந்த அவரை சிகிச்சைக்கு வந்த சிலர் மருத்துவரைத் தாக்கியுள்ளனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க விக்னேஷ் என்பவர் மருத்துவரைக் கத்தியால் குத்த மருத்துவமனையே பரபரப்பானது.

தாக்கிய காரணம்

தனது தாய்க்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை என ஆத்திரத்தில் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவரின் முகம், கை, என பல இடங்களில் கத்தியால் குத்த இரத்தம் வெளியேறியது இதனால் அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டார். கத்தியால் குத்தியவர் ஏதும் நடக்காதது போல் நடந்து செல்ல அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டபின் மருத்துவமனைக் காவலர்கள் அவரை விரட்டிப் பிடித்தனர்.

பழிவாங்கும் நோக்கில் நடந்த இந்தச் சம்பவத்தினை அறிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் என்ன நடந்தது எனக் கேட்டறிந்தார். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளும் பதிவாகி உள்ள நிலையில் தற்போது விக்னேஷ் உள்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

மருத்துவர் பாலாஜி ஏற்கனவே இதய நோயாளி என்பதால் சில மணி நேரம் கழித்தே அவரின் உடல்நிலை குறித்துக் கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் தவிர அனைத்து அரசு மருத்துவர்களும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் காக்கும் சட்டங்கள் இருந்த போதும் மருத்துவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.