பிறப்பும், இறப்பும் வாழ்வின் ஓர் அங்கங்கள். வரும் போது எதையும் எடுத்து வருவதில்லை. போகும் போது எதையும் கொண்டு செல்வதுமில்லை. இருப்பினும் வாழ்கிற நாட்களில் குடும்பம், உறவுகள், சொத்து, பொறாமை, எதிர்மறை குணங்கள் என அனைத்தும் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஒட்டிக் கொள்கிறது.
இறப்பு ஒன்று தான் நிரந்தரம் என்று அறியாமலேயே வாழ்க்கைப் பயணத்தில் சென்று கொண்டிருக்கிறோம். வாழும் நாட்களை சந்தோஷமாகக் கழித்து இறுதியில் யாருக்கும் பாரமின்றி உலக வாழ்வினை முடித்துக் கொள்வது சிலருக்கு மட்டுமே அமையும் வரம்.
இப்படி ஒரு வரத்தினை வாங்கி தனது இறப்பில் கூட உறவுகளின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என சந்தோஷமான இவ்வுலக வாழ்விற்கு விடை கொடுத்திருக்கிறார் ஒரு பாட்டி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்ன பாலார் பட்டி என்ற கிராமத்தினைச் சேர்ந்த மூதாட்டி நாகம்மாள். வயது 96. இவரது கணவர் பூசாரி பரமத்தேவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே காலாமாகி விட்டார். எனினும் நாகம்மாள் தனது உறவினர்களுடன் சின்ன பாலார்பட்டியில் வசித்து வந்தார்.
திருநெல்வேலியில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபரை தாக்கிய காவலருக்கு தண்டனை.. பறந்த உத்தரவு
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நாகம்மாள் நேற்று முன்தினம் இயற்கை மரணம் எய்தினார். இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் மற்றும் 78 பேரன் பேத்திகள் உள்ளனர். பொதுவாக அதிக வயதில் இறந்தவர்களை கிராமங்களில் கல்யாணச் சாவு என்று கூறி அவர்கள் விரும்பிய வகையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமைத்து அதனை ஒரு விழாவாகவே கொண்டாடுவர்.
அந்த வகையில் நாகம்மாளின் இறப்பினையும் கொண்டாட முடிவு செய்த குடும்பத்தினர் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியைச் சுற்றி கும்மியடித்து பாட்டுப் பாடினர் இவரின் உறவுப் பெண்கள்.
இதுமட்டுமல்லாது இறப்பு வீடுகளில் கரகாட்டம், தப்பு பறை அடிப்பது வழக்கம். ஆனால் நாகம்மாளுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி வைக்கப்பட்டிருந்தது. இதில் நடனக் குழுவினருடன் கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளிட்டோர் நடனமாடினர்.
இறந்த நாகம்மாள் 4 தலைமுறைகளைக் கடந்தவர் என்பதால் அதிக அளவிலான சொந்தங்கள் இவரது இறப்பில் பங்கேற்க வீடே திருவிழாக் கோலம் பூண்டது. இதன்பின்னர் பாட்டி நாகம்மாள் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
தன்னுடைய இறப்பினை எவ்வாறு கொண்டாட வேண்டும் என நாகம்மாள் முன்கூட்டியே தனது உறவுகளிடம் கூறியிருப்பதாகக்த் தெரிகிறது. இதன்படி அவரது கடைசி ஆசையை கோலாகலமாகக் கொண்டாடி பாட்டிக்கு பார்ட்டி மோடில் அஞ்சலி செலுத்தினர்.