2004 ஆம் வருடம் ஜூலை 16 இதே நாளில் தாய் தந்தையரின் விரலை பிடித்து சுட்டித்தனம் கலந்த மகிழ்ச்சியோடு கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்துள்ள கிருஷ்ணா பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். பால்மணம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள் அப்போது நினைத்திருக்கவில்லை இதுதான் தங்களின் கடைசி சந்தோசமான நாள் என்று.
தங்களின் செல்ல குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய சில மணி நேரங்களிலேயே அந்த கோர சம்பவம் நடந்தேறியது. பள்ளியில் மதிய சமையல் செய்து கொண்டிருந்தபோது கவனக்குறைவால் தீ விபத்து ஏற்பட்டு சமையல் கூடத்தின் கூரையில் பற்றிய நெருப்பு பள்ளி வகுப்பறைகளிலும் பரவத் துவங்கியது.
தீயின் கோர பிடியில் சிக்கிய குழந்தைகளின் அலறல் கேட்போரை பதப்பதைக்க செய்தது. சாலையில் சென்றவர்கள், அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு வீரர்கள் என பலர் தங்களால் இயன்ற அளவு கடுமையாக போராடிய பிறகும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. சற்று நேரத்திலேயே அலறல் சத்தம் அடங்கி 94 குழந்தைகள் உடல் கருகி உயிர் இழந்தனர்.
நெருப்பே சிக்கி கரிக்கட்டை போன்று சடலமாக கிடந்த குழந்தைகளின் உடலை பார்த்து பெற்றோரும் பொது மக்களும் கதறியதில் அந்த இடமே சோகத்தால் சூழ்ந்திருந்தது. இத்தகைய கொடூர சம்பவம் நிகழ்ந்து 19 வருடங்கள் நிறைவடைந்து விட்டது.
ஒவ்வொரு வருடமும் இதே நாளில் குழந்தைகளின் இழப்பை நினைத்து கண்ணீர் மல்க பெற்றோரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். சிறிய கவனம் குறைவு நிமிடத்தில் மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்கு சான்றாக அமைந்தது கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம்.