அவசரமான இந்த டிஜிட்டல் உலகில், ஒரு செய்தியை நீளமாக பக்கம் பக்கமாக படிக்க மக்களுக்கு நேரமில்லை. இதை புரிந்து கொண்டு, வெறும் 60 வார்த்தைகளில், 30 வினாடிகளில் ஒரு செய்தியை படித்து முடிக்கும் அளவுக்கு தொடங்கப்பட்டதுதான் InShorts என்ற செயலி. தற்போது, இந்த செயலி மிகப் பிரபலமாகி, வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வேலைப் பளுவில் இருக்கும் பொது மக்கள், நீளமான கட்டுரைகளை படிக்க நேரம் இல்லாமல் இருக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், எதை தேர்வு செய்து படிப்பது? என்ற குழப்பமும் இருந்து வருகிறது. மேலும், பல கட்டுரைகள் உண்மையான தகவல்களை அளிக்காமல், தங்களது சொந்த கருத்துக்களையும் பிரதிபலித்ததால், வாசகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில்தான், InShorts ஒவ்வொரு முக்கியமான செய்தியையும் தேர்வு செய்து, 60 வார்த்தைகளில் அதை சுருக்கி, 30 வினாடிகளுக்குள் படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு மாற்றிக் கொடுக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நாளிதழ்களின் செய்திகளை மட்டும் வெளியிட்டு, தேவையற்ற தகவல்களை நீக்கி, நடுநிலையான செய்திகளை மட்டும் வழங்கி, எந்த ஒரு சார்பும் இல்லாத செய்திகளை வழங்குகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைப் பெற்ற இந்த செயலி, இந்தியாவின் முன்னணி செய்தி செயலியாக மாறியது. தற்போது, செய்திகள் மட்டுமின்றி, வீடியோக்கள், இன்ஃபோகிராபிக்ஸ் மற்றும் வலைப்பதிவுகளையும் உள்ளடக்கி வழங்குகிறது.
இரண்டே வருடங்களில் இந்த செயலி லாபகரமாக மாறிய நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி, ரூ. 3700 கோடி மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி தீபித் புர்காயஸ்தா இதுகுறித்து கூறிய போது:
“ஒவ்வொரு செய்தியையும் வாசிப்பதற்கான நேரத்தை கண்காணித்து, படங்களைச் சேர்ப்பதன் மூலம் வாசிப்பு உற்சாகத்தை அதிகரிப்பதே எங்களது முக்கிய இலக்கு. பயனர்கள் குறுகிய நேரத்தில், நீளமான கட்டுரையில் சொல்லப்பட்டதைக் விரைவாக புரிந்துகொள்ள, அவர்களுக்கு தேவையான செய்திகளை மட்டும் வழங்குகிறோம். தேவையற்ற செய்திகளை தராமல், முக்கியமான செய்திகளை மட்டுமே பயனர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்’ என்று கூறியுள்ளார்.
InShorts இந்தியாவின் டிஜிட்டல் செய்தித் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மேலும், புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தி, விரிவடைய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.