ஒவ்வொருவருக்கும் இந்த 6 காப்பீடுகள் அவசியம்.. என்னென்ன?

By Bala Siva

Published:

 

காப்பீடு என்பது முதலீடு அல்ல என்பதையும், முதலீட்டுடன் கூடிய காப்பீடு எந்தவிதமான பயனையும் தராது என்றும், காப்பீடு என்பது ரிஸ்கின் அவசியத்திற்கு மட்டுமே தனியாக காப்பீடு பாலிசிகளை எடுக்க வேண்டும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆறு காப்பீடு பாலிசிகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

முதலாவது ஆக, தனிநபர் ஆயுள்  காப்பீடு.  ஒரு குடும்பத்தில் யாருக்கு வருமானம் இருக்கிறதோ அந்த நபரின் பெயரில் இந்த காப்பீடு எடுத்தால் போதும். அவருடைய வருமானத்தை நம்பி தான் அந்த குடும்பம் இருக்கிறது என்றால், அவருடைய இறப்பு என்பது அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்து விடும். எனவே தனி நபர் காப்பீடு என்பது மிகவும் முக்கியம். டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது.
அடுத்ததாக, மருத்துவ காப்பீடு. ஒருவர் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் ஒரு சில நாட்களில் இழக்கிறார்கள் என்றால், அது கண்டிப்பாக மருத்துவ சிகிச்சை கட்டணத்தில் பயன்படுத்தப்படும். எனவே குறைந்தது,  5 லட்சம் ரூபாய்க்கு குடும்பத்துடன் கூடிய மருத்துவ காப்பீடுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது ஆக, தனிநபர் விபத்து காப்பீடு. இதுவும் ஒரு குடும்பத்தில் வருமானம் உள்ள நபருக்கு மட்டும் எடுத்தால் போதும். பகுதி ஊனம் ஆகிவிட்டாரோ, நிரந்தர ஊனம் ஆகிவிட்டாலோ அல்லது விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டாலோ, இந்த காப்பீடு அவரது குடும்பத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அடுத்ததாக, சொத்து காப்பீடு. விலைமிகுந்த சொத்துக்கள் வைத்து இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த காப்பீடு எடுக்க வேண்டும். தீ விபத்து, மழை வெள்ளம் போன்ற பாதிப்புகளின் போது இழப்பீடு கிடைக்கும்.

ஐந்தாவது, வாகன காப்பீடு. வாகன காப்பீடு என்பது அவசியம் என்று சட்டம் கூறுவதால், இதை எடுத்து ஆக வேண்டும். வேறு வழியில்லை.

ஆறாவதாக, கடன் காப்பீடு. வீட்டு கடன் போன்ற பெரிய கடன்கள் வாங்கும் போது, அந்த கடனுக்கு இணையாக ஒரு காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கிவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்த காப்பீடு முழு அளவில் கடனை திருப்பி செலுத்தி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட ஆறு காப்பீடுகள் அவசியம் என்பதால், அவற்றை எடுத்து நிம்மதியான வாழ்க்கை பெற அறிவுறுத்தப்படுகிறது.