ட்விட்டர் என்ற சமூக வலைதளத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிய நிலையில், தற்போது அவர் இந்த தளத்தை 33 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால், இந்த விற்பனையில் தான் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய பின்னர், பணியாளர்களின் எண்ணிக்கையை பெரிதளவில் குறைத்து, “X” என பெயர் மாற்றினார். இதில், வெறுப்பு பேச்சு, தவறான தகவல் பரப்புதல், போலியான அக்கவுண்ட்கள் ஆகியவற்றை தவிர்த்து, விதிகளை மாற்றி, புதிய பாணியில் தளத்தை நடத்தி வருகிறார். மேலும், தற்போது தங்களது ஸ்டேட்டஸின் இம்ப்ரெஷனுக்கு தகுந்தவாறு X பயனர்கள் வருமானமும் பெற்று வருகின்றனர்.
எலான் மஸ்க் வாங்கிய பிறகு, X-ன் பயனர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர். இந்த நிலையில், அவர் “X.AI” என்ற ஒரு புதிய தளத்தையும் அறிமுகம் செய்தார். X பயனர்கள், X.AI தளத்தையும் பயன்படுத்தலாம் என்ற நிலையில், இவை வெவ்வேறு நிறுவனங்களாக இயங்கின.
தற்போது, இந்த இரண்டு நிறுவனங்களை இணைக்கும் வகையில், எலான் மஸ்க் தன்னுடைய “X” தளத்தை X.AI நிறுவனத்திற்கே 33 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. அதாவது அவருடைய ஒரு நிறுவனம், இன்னொரு நிறுவனத்தை வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், செயற்கை நுண்ணறிவு, X-ன் பிரமாண்டமான அனுபவத்தையும் இணைப்பதன் மூலம் பயனர்களுக்கு மிகப்பெரிய அனுபவங்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்தார். மேலும், X.AI-யின் மதிப்பு 80 பில்லியன் டாலர்களில் காணப்படுவதாகவும், தற்போது 33 பில்லியன் டாலர் மதிப்புள்ள X அதில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இனி, இரு நிறுவனங்களும் ஒன்றாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனது X தளத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யாமல், தன்னுடைய நிறுவனத்திற்கே விற்றுவிட்டார் என்பதே இதில் இருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைவதன் மூலம், பயனர்களுக்கு புத்திசாலித்தனமான, அர்த்தமுள்ள அனுபவங்கள் கிடைக்கும். மேலும், AI தொழில்நுட்பத்துடன் இணைந்த ஸ்டேட்டஸ்களை மேம்படுத்தி பயனர்களுக்கு ஆச்சரியமான அனுபவத்தை வழங்குவதே எங்களது முதல் நோக்கம் என அவர் பதிவு செய்துள்ளார்.