ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட 43 குரங்குகள் திடீர் மாயம்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!

By Bala Siva

Published:

அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்தில் பல்வேறு ஆய்வுகளுக்காக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த 43 குரங்குகள் திடீரென தப்பி விட்டதால், அந்த ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரொலினா மாகாணத்தில், ஆல்பா ஜெனிசிஸ் என்ற நிறுவனம் மருத்துவ பரிசோதனை உள்பட பல்வேறு காரணங்களுக்காக குரங்குகளை பயன்படுத்தி வந்த நிலையில், அவற்றில் திடீரென 43 குரங்குகள் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

குரங்குகளை பராமரித்து வருபவர் திடீரென அதன் கூண்டை திறந்து விட்டதாகவும், அதிலிருந்து 43 குரங்குகள் தப்பிவிட்டதாகவும், 7 குரங்குகள் மட்டும் கூண்டை விட்டு வெளியேறவில்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பிய குரங்குகள் அனைத்தும் பெண் இனத்தை சேர்ந்தவை என்றும், சுமார் மூன்று கிலோவிற்கு அதிகமான எடை கொண்ட இந்த குரங்குகளுக்கு எந்த விதமான நோய் பரிசோதனையும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், தப்பிய குரங்குகளை மீண்டும் பிடித்து கொண்டுவர ஆய்வகத்தின் ஊழியர்கள் முயற்சி செய்து வருவதாகவும், மழைக்காலம் என்பதால் குரங்குகளை தேடி கண்டுபிடிப்பதில் சவாலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 43 குரங்குகள் தப்பியதால் அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டாம் என்றும், கைக்குழந்தைகளை தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: america, lab, monkey