300 கோடி ரூபாய் மோசடி.. தேவநாதன் யாதவ்க்கு அடுத்த சிக்கல்… அமலாக்கத்துறை அதிரடி முடிவு

By Keerthana

Published:

சென்னை: தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தத. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி முதலீட்டாளர்கள் நலச்சங்க தலைவர் சதீஷ்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அஸ்வின்குமார் கோர்டில் ஆஜராகி வாதிட்டார் அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவல்கள் மூலம் வழக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.