திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை.. கலெக்டரிடம் மனு அளித்த 30 வயது இளைஞர்..!

10 ஆண்டுகளாக தனக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என 30 வயது விவசாய இளைஞர் ஒருவர் கலெக்டர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தபோது மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது விவசாய இளைஞர் திருமணத்திற்காக கடந்த சில ஆண்டுகளாக பெண் தேடிய போது அவருக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து சங்கப்பா என்ற அந்த நபர் கலெக்டர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சென்று தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், 10 ஆண்டுகளுக்கு மேலாக திருமணத்திற்காக பெண் தேடியும் தனக்கேற்ற பெண் கிடைக்கவில்லை என்றும் எனவே இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின் மூலம் தனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நான் பார்க்கும் பெண்கள் எல்லோரும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்கள் என்றும் விவசாயி என்பதால் எனக்கு யாரும் பெண் தர மாட்டேன் என்கிறார்கள் என்றும் ஒரு நல்ல மணப்பெண்ணை கண்டுபிடிக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் நிலையில் சங்கப்பாவின் இந்த கோரிக்கையை கேட்டு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஒரு பக்கம் ஆச்சரியமடைந்தாலும் இன்னொரு பக்கம் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தனர். இருப்பினும் சங்கப்பாவின் மனுவை கலெக்டர் பெற்றுக்கொண்டு கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற ஏற்பாடு செய்கிறேன் என்றும், உங்களுக்கு விரைவில் நல்ல பெண் கிடைக்கும் என்றும், நானே திருமணத்தை நடத்தி வைப்பேன்  என்றும் ஆறுதல் அளித்து அவரை வழியனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.