30% புராசஸிங் கட்டணம்.. 36% வரை வட்டி.. கடன் கொடுத்து உயிரை எடுக்கும் செயலிகள்..!

By Bala Siva

Published:

 

ஒரு காலத்தில், இந்தியர்கள் கடன் வாங்குவதில் அஞ்சுவார்கள். “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற ராமாயண பாடலும் அனைவருக்கும் மனப்பாடமாக இருந்தது. ஆனால் தற்போது, கடன் வாங்கும் வழிமுறைகள் மிகவும் எளிதாகிவிட்டதால், ஆடம்பரச் செலவுகள் அதிகரித்து, கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தேவையற்ற பொருட்களை வாங்குவதற்காக கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்த முடியாமல், பலர் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாபமான நிகழ்வுகளும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கினால், ஒருவேளை தப்பித்து விடலாம். ஆனால் சீன செயலிகளின் பின்புலத்தில் செயல்படும் கடன் செயலிகளில் கடன் வாங்கினால், அப்போது அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. இந்த நிறுவனங்கள் கடன் கொடுக்கும்போது, 36% பிராசசிங் கட்டணமாக எடுத்து கொள்கிறது. அதாவது, 5000 ரூபாய் கடனுக்கு 1500 ரூபாய் பிராசசிங் கட்டணம் எடுத்து கொண்டு ரூ.3500 று மட்டுமே கொடுக்கின்றன. மேலும், ஒரே வாரத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், 36 சதவீதம் வட்டி என்றும் குறிப்பிடுகின்றன.

இதன் பின்னால் உள்ள ஆபத்தை அறியாமல், பலர் செயலிகளில் கடன் வாங்கி, அதன் பிறகு பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். கடன் கொடுக்கும் செயலிகள், மொபைலில் உள்ள அனைத்து விவரங்களையும் எடுத்துக் கொள்வதால், பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால், நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆபாசமாக வெட்டி ஒட்டப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அனுப்பி, மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. ஒரு கட்டத்தில், தற்கொலை முடிவை எடுக்கவைக்கும் வரை இந்த பிரச்சனை தீவிரமாகிறது.

எனவே, சீன செயலிகளின் பின்புறத்தில் செயல்படும் இதுபோன்ற செயலிகளில் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.