தமிழக அரசியல் களம், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இம்முறை, விஜய்யின் அரசியல் பிரவேசம், தேர்தலின் போக்கையே தீர்மானிக்கும் ஒரு மையப்புள்ளியாக அமையப்போகிறது என்ற பரவலான கருத்து நிலவுகிறது. அவர் யாருடைய வாக்குகளைப் பிரிக்கப் போகிறார்? யாரை வெற்றிபெற வைக்கப் போகிறார்? அல்லது யாரை தோற்கடிக்க போகிறார்? அல்லது அவரே ஆட்சியைக் கைப்பற்றுவாரா? -இந்த கேள்விகளே 2026 தேர்தல் அரசியலின் முக்கிய அம்சமாக உள்ளன.
தேர்தல் வரலாற்றில் ஒரு மையப்புள்ளி
தமிழகத்தின் கடந்த காலத் தேர்தல்களை எடுத்துக்கொண்டால், ஒவ்வொன்றுக்கும் ஒரு மைய அம்சம் இருந்தது கண்கூடு.
1991 தேர்தல்: ராஜீவ் காந்தி படுகொலையும், அதற்கு திமுக மீது விழுந்த பழியும்
1996 தேர்தல்: ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், நடிகர் ரஜினிகாந்தின் “வாய்ஸ்”ஸும் தேர்தலை மையப்படுத்தின.
2001 தேர்தல்: தி.மு.க. ஆட்சிக்கான எதிரான வலுவான அலை மற்றும் பல்வேறு பிரச்சனைகள் மையப்படுத்தப்பட்டன.
2006 தேர்தல்: தி.மு.க.வின் இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.
2011 தேர்தல்: தி.மு.க. ஆட்சியின் மீதான அராஜகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஒரு தேர்தலாக அமைந்தது.
2016 தேர்தல்: பெரிய அளவிலான அலைகள் ஏதும் இன்றி, இரு பெரும் திராவிட கட்சிகளும் பலப்பரீட்சை செய்தன.
2021 தேர்தல்: “ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்” என்ற அலை இருந்தது, மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினர்.
அந்த வகையில், 2026 தேர்தல், விஜய் என்ன செய்யப்போகிறார்? என்பதுதான் தலையாய கேள்வியாக மாறியுள்ளது.
விஜய்யின் தாக்கம்: மூன்று சாத்தியமான காட்சிகள்!
தமிழக அரசியல் சூழலில், விஜய்யின் வருகை மூன்று முக்கிய சாத்தியமான தேர்தல் காட்சிகளை உருவாக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்:
1. தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பு – அ.தி.மு.க.வுக்கு சாதகம்:
விஜய், அதிக அளவில் தி.மு.க.வின் வாக்கு வங்கிகளை பிரித்தால், அது தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தி.மு.க.வின் வாக்குகள் கணிசமாகக் குறைந்து, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு வாய்ப்பாக இது அமையலாம்.
2. அ.தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பு – தி.மு.க.வுக்கு சாதகம்:
விஜய், அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிகளை பெருமளவில் கவர்ந்து, அதை பலவீனப்படுத்தினால், தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர அது ஒரு காரணமாக அமையலாம்.
3. இரு திராவிடக் கட்சிகளுக்கும் பின்னடைவு – விஜய்க்கு வாய்ப்பு:
விஜய், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளின் வாக்குகளையும் கணிசமாக பிரித்தால், அது இரு பெரும் கட்சிகளையும் பலவீனப்படுத்தும். இதனால், இரு கட்சிகளும் தனித்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முடியாமல் போகும் சூழல் உருவாகலாம். இந்த நிலை ஏற்பட்டால், தமிழக வெற்றி கழகம் ஒரு புதிய சக்தியாக எழுச்சி பெற்று, ஆட்சியைப் பிடிக்கும் அல்லது ஆட்சி அமைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றும் வாய்ப்பு உருவாகும்.
மக்கள் மனநிலை: புதிய சக்திக்கு ஏங்கும் தமிழகம்!
காலங்காலமாக ஒரே மாதிரியான அரசியல் அணுகுமுறைகளையும், பரஸ்பர குற்றச்சாட்டுகளையும் பார்த்து சலிப்படைந்த மக்கள், ஒரு புதிய மாற்றத்தை விரும்புகின்றனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் அப்பால் ஒரு மாற்று தலைமை வேண்டும் என்ற மக்களின் எண்ணம் தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே விஜய் பார்க்கப்படுகிறார். அவர் வந்து இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் அரசியல் களத்திலிருந்து விரட்ட வேண்டும்” என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த மூன்று சாத்தியக்கூறுகளில் ஒன்றுதான் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடைபெற உள்ளது. அது என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
