2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து விட்ட நிலையில் இந்த 365 நாட்களில் இருந்து ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையில் கற்றுக் கொள்ளவும் தங்களிடம் மாற்றிக் கொள்ளவும் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். இதனிடையே, இந்த ஆண்டில் அவர்கள் சந்தித்த நல்ல விஷயங்களை ஒரு பக்கமும், வருத்தம் அடைந்த விஷயங்களை ஒரு பக்கமும் பட்டியல் போட்டு புது வருடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதிலும் ஒரு வரையறை மேற்கொள்வார்கள்.
இப்படி தனிப்பட்ட முறையில் நிறைய முடிவுகளை எடுத்தாலும் இன்னொரு புறம், சர்வதேச அளவில், இந்திய அளவில் கவனம் ஈர்த்த விஷயங்களை கூட செய்திகளில் தற்போது பட்டியலிட தொடங்கி இருப்பார்கள். இதே போல விளையாட்டு, சினிமா என துறை சார்ந்தும் கவனம் ஈர்த்த விஷயங்கள் அதிக வைரலாகும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு திருமணத்தில் காலடி எடுத்து வைத்த சினிமா பிரபலங்கள் யார் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
மீதா ரகுநாத் – தீபு ராஜ்கமல்
முதல் நீ முடிவும் நீ, குட் நைட் என இரண்டே திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் மீதா ரகுநாத். பக்கத்து வீட்டு பெண் போல தனது நடிப்பில் அசத்திய இவர், தீபு ராஜ்கமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்ஞானி
தெலுங்கு, தமிழ் என தென் இந்திய மொழிகளில் நிறைய திரைப்படங்கள் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் ரகுல் ப்ரீத் சிங். தீரன் அதிகாரம் ஒன்று, அயலான், ஸ்பைடர் என ரகுல் ப்ரீத் சிங் நடித்த திரைப்படங்கள் அதிகம் ஹிட்டாகி இருந்தது. இவர் ஜாக்கி பக்ஞானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
காளிதாஸ் – தாரிணி
மலையாளம், தமிழ் என பல மொழிகளில் தனது காமெடி கலந்த நடிப்பால் பெயர் எடுத்தவர் தான் ஜெயராம். இவரது மகனான காளிதாசும் தற்போது நாயகனாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். காளிதாஸ் நீண்ட நாட்களாக காதலித்து வந்த தாரிணியை இதே 2024 ஆம் ஆண்டில் கரம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாக சைதன்யா – சோபிதா துலிபாலா
பிரபல நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா, அவரை விவாகரத்து செய்திருந்தார். தொடர்ந்து மற்றொரு நடிகையான சோபிதா துலிபாலாவை காதலித்து பிரபலங்களின் வாழ்த்து மழைக்கு நடுவே நாக சைதன்யா கரம்பிடித்திருந்தார்.
ஐஸ்வர்யா – உமாபதி
இதற்கு அடுத்தபடியாக பிரபல நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவும், மற்றொரு நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதியும் திரைப்படத்திற்கு நடுவே காதலிக்க, பெற்றோர்களின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் அமோகமாக நடந்திருந்தது.
ரம்யா பாண்டியன் – தவான்
தனது போட்டோ ஷூட், ஜோக்கர் திரைப்படம், பிக் பாஸ், குக் வித் கோமாளி என பலவற்றின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ரம்யா பாண்டியன், லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.
மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு
என்னை நோக்கி பாயும் தோட்டா, சபா நாயகன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்து பெயர் எடுத்த மேகா ஆகாஷ், தனது காதலன் சாய் விஷ்ணுவை செப்டம்பர் 15 ஆம் தேதியன்று திருமணம் செய்திருந்தார்.
வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ்
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார், தான் காதலித்து வந்த நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்திருந்த சூழலில் பல பிரபலங்களும் நேரில் வந்து வாழ்த்தி இருந்தனர்.
கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி
இந்த ஆண்டு கோலிவுட்டில் நடந்த திருமணத்தில் அனைவரையும் சர்ப்ரைஸில் ஆழ்த்தி இருந்த திருமணம் என்றால் அது கீர்த்தி சுரேஷுடையது தான். இவர் பல ஆண்டுகளாக ஆண்டனி என்பவரை காதலித்து வர, ரகசியமாகவும் இந்த விஷயம் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக இதனை அறிவித்த கீர்த்தி சுரேஷ், டிசம்பரில் ஆண்டனியின் கரம் பிடித்திருந்தார்.
பிரேம்ஜி – இந்து
இந்த ஆண்டில் மற்றொரு சர்ப்ரைஸான திருமணம் என்றால் பிரேம்ஜி உடையது தான். இதற்கு மேல் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக தான் இருப்பார் என் கருதிய சூழலில் 45 வயதில் இந்து என்ற பெண்ணையும் மணந்து முரட்டு சிங்கிள் பட்டியலில் இருந்து மிங்கிளாகி ப்ரமோஷன் பெற்றிருந்தார் பிரேம்ஜி அமரன்.
சித்தார்த் – அதிதி ராவ்
2024-ல் திருமணம் செய்த பிரபலங்களில் இரண்டு பேரும் சினிமா துறையில் இருக்க அதில் முக்கியமான ஜோடி தான் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோர். இவர்கள் ஒன்றாக பல இடங்களில் சுற்றித் திரிய, ரசிகர்களே இவர்கள் காதலித்து வருகிறார்கள் என்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து சித்தார்த் – அதிதி ராவ் திருமணமும் குடும்பத்தினர் சூழ அமோகமாக நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.