அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவதற்கான உயர் திறமை கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா கட்டணத்தை அதிரடியாக $1,00,000 டாலராக அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் என உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கம் , அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் , ஒரு செவிலியர் ஆட்சேர்ப்பு நிறுவனம் மற்றும் பல மத அமைப்புகள் இணைந்து தாக்கல் செய்துள்ள இந்த மனு, டிரம்ப்பின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், அமெரிக்க நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வாதிடுகிறது.
இந்தியா, சீனா, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது H-1B விசா பெற்று அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், தொழில்நுட்பத் துறை ஊழியர்களே அதிகம். இந்த விசாவை பெறுவதற்கான கட்டணம் முன்னர் சுமார் $2,000 முதல் $5,000 வரை இருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டு வேலைவாய்ப்பை பாதுகாக்கும் நோக்கில், புதிய H-1B விசாக்களுக்கான கட்டணத்தை அதிரடியாக $1,00,000 டாலராக உயர்த்தினார். பழைய கட்டணத்துடன் ஒப்பிடும்போது, இந்த உயர்வு பல மடங்கு அதிகமாகும்.
இந்த திடீர் கட்டண உயர்வு, அமெரிக்காவில் பணியாற்றும் கனவோடு இருக்கும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்களுக்கும், வெளிநாட்டுத் திறமைகளை நம்பியிருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிரம்ப்பின் இந்த கட்டண உயர்வு உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, சான் பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற, உலகம் முழுவதும் உள்ள திறன் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி கொள்ளும் வகையிலும் H-1B விசா வழங்கும் நடைமுறை நாடாளுமன்றத்தால் சட்டபூர்வமாக கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட இந்த விசா திட்டத்தை ரத்து செய்யவோ அல்லது இவ்வளவு பெரிய அளவில் கட்டண மாற்றம் செய்யவோ அதிபர் டிரம்புக்கு அதிகாரம் இல்லை. கட்டணங்கள், வரிகள் போன்றவற்றை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு; அதிபர் தன்னிச்சையாக இவ்வளவு பெரிய தொகையை உயர்த்தியது சட்ட விரோதமானது’ வாதிட்டது. மேலும் அதிக கட்டணம் காரணமாகத் திறமையான வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிற்கு வருவதைத் தவிர்க்க நேரிடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது..
வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் மனுவில், அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும், H-1B விசா வழங்குவதில் பழைய நடைமுறையை தொடர உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் திறமையான பணியாளர்களை கட்டுப்படுத்தும் இந்த உத்தரவு நாட்டின் நலன்களுக்கு எதிரானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
