அமெரிக்காவின் ஜான் டீர் என்ற விவசாய இயந்திர உற்பத்தி நிறுவனம் தனது தயாரிப்பு நடவடிக்கைகளை மெக்சிகோவிற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது அமெரிக்க விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் 200% இறக்குமதி வரி விதிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கையால் அயோவா மற்றும் இல்லினாய்ஸ் போன்ற மாகாணங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் வேலை இழப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
1837-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜான் டீர் நிறுவனம், அமெரிக்க விவசாயத்தின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் அமெரிக்க விவசாயிகளுக்கு இயந்திரங்களையும், வாழ்வாதாரங்களையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. உள்ளூர் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்த இந்த நிறுவனம் தற்போது மெக்சிகோவுக்கு மாற்றப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் சுமார் 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க விவசாய துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மெக்சிகோவுக்கு மாறுவதற்கான காரணங்களாக அமெரிக்க சந்தைக்கு அருகாமை, ஒருங்கிணைந்த தளவாடங்கள், சாதகமான தொழிலாளர் கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்து தாமதங்கள் இன்றி உதிரி பாகங்களை அணுகுதல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
இந்த இடமாற்றத்தால் அமெரிக்காவின் மத்திய மேற்கு நகரங்களில் உள்ள விவசாயிகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. வேலை நீக்கம், உற்பத்தி மாற்றம் மற்றும் தொழிலாளர்களிடையே பரவியுள்ள பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவை இந்த மாற்றத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் ஆகும். இந்த வேலைகள், உள்ளூர் வணிகங்கள் முதல் இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான நிதி வழங்குவது வரை ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கின்றன. இது பொருளாதாரரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
