புதிய பைக் வாங்குபவர்களுக்கு 2 ஹெல்மேட் கட்டாயம் வழங்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு..!

  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு புதிய இருசக்கர வாகனத்திற்கும் இரண்டு ISI முத்திரை பெற்ற ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருவதன்…

helmet

 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு புதிய இருசக்கர வாகனத்திற்கும் இரண்டு ISI முத்திரை பெற்ற ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் நடைபெற்ற ஒரு ஆட்டோ உச்சி மாநாட்டில் பேசிய கட்கரி, இருசக்கர வாகன ஓட்டுநர்களும், பின் இருக்கை பயணிகளும் பாதுகாப்பாக இருக்க இந்த முடிவு முக்கியமானது என குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 69,000 பேர் இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழக்கின்றனர், மேலும் இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமையின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

புள்ளிவிவரங்களின்படி 2002 முதல் 2023 வரை, ஹெல்மெட்டுகள் 36,400க்கும் அதிகமான உயிர்களை பாதுகாத்துள்ளன. இருந்தாலும், இந்தியாவில் சாலை விபத்துகள் முக்கியமான உயிரிழப்பு காரணமாகவே இருந்து வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் 4.8 லட்சம் விபத்துகள் நிகழ்கின்றன, இதில் 1.88 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகின்றன. குறிப்பாக 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களே பெரும்பாலான உயிரிழப்புகளில் உள்ளனர்.

இருசக்கர வாகன ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த முயற்சியை வரவேற்றுள்ளது. ஏனெனில், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க பல ஆண்டுகளாக அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருசக்கர வாகன விற்பனை இடத்திலேயே ஹெல்மெட்டுகளை எளிதாக கிடைக்க செய்வது, அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

புதிய விதிப்படி இருசக்கர வாகன விற்பனை நிறுவனங்கள் புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 2 ஹெல்மெட் கொடுக்க வேண்டும் என்றும் இரண்டுமே ISI தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த முயற்சி ஹெல்மெட் பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிக்க செய்வதோடு, இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.