உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 58 வயது பேராசிரியர் ஒருவர் ஆன்லைனில் 18 நாட்கள் “டிஜிட்டல் சிறைபிடிப்பு” செய்யப்பட்டதாகவும், அவரை கேமராவை விட்டு நகர விடாமல் வைத்த மோசடியாளர்கள் சுமார் 47 லட்சம் ரூபாய் வரை அவரிடம் மோசடி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியரை மோசடியாளர்கள் “டிஜிட்டல் சிறை” வைத்துள்ளனர். 18 நாட்கள் கட்டாயமாக அவரை வேறு எங்கும் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். அந்த பேராசிரியர் பண மோசடியில் ஈடுபட்டதாக நம்ப வைத்து, அவரை மனதளவில் சிதைத்துள்ளனர்.
டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கிய இந்த “டிஜிட்டல் சிறை” 18 நாட்கள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அவரை அன்றாட பணிகளுக்குப் போகவும் அனுமதிக்கவில்லை. இது குறித்து தாமதமாக தகவல் கிடைத்த போலீசார், அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இதன்படி, பேராசிரியரை “டிஜிட்டல் சிறை” செய்த 25 வயது அமன் குஷ்வாஹா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் மிக நீண்ட காலம் “டிஜிட்டல் சிறை” செய்யப்பட்டவர் இவரே என்று கூறப்படுகிறது.
“டிஜிட்டல் சிறை” குறித்து காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இன்னும் இதுபோன்ற மோசடியில் படித்தவர்களே சிக்கி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.