இன்று சென்னையில் தனியார் ஹோட்டலில் 16-வது நிதிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை, இயற்கைப் பேரிடர்கள் அடிப்படையிலான கோரிக்கைகளை வழங்கினார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
புகழ் பெற்ற பொருளாதார அறிஞர் டாக்டர். அரவிந்த் பனகாரியா அவர்களின் சீரிய தலைமையின் கீழ் அமைக்கப்பட்டு, இன்று தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்திருக்கும் 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், பரந்து விரிந்த இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசு நாடாக மாற்றும் வகையில் அமைந்திடும் என்று நான் நம்புகிறேன்.
16-வது நிதிக்குழு கூட்டம்
ஒன்றிய அரசிற்கும் பல்வேறு மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகார பகிர்வு மற்றும் பொறுப்புகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கனவே வரையறுத்துத் தந்திருக்கிறது. அத்தகைய வழிகாட்டுதலின்படி நாம் கடைபிடித்துவரும் கூட்டாட்சித் தத்துவத்தை பின்பற்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தமது மாநிலங்களின் உரிய தேவைகளை நிறைவேற்றுவதுடன் நாட்டின் வளர்ச்சிக்கும் உரிய பங்காற்றி வருகின்றன.
எனினும், சுகாதாரம், கல்வி, சமூகநலம் மற்றும் வேளாண்மை போன்றதுறைகளின் முன்னேற்றத்திற்கான பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள் தான் நிறைவேற்றி வருகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அதற்கு மாறாக இந்த பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்றத் தேவையான வருவாயைப் பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன.
அந்தவகையில், கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தியதை நாங்கள் உளமாற பாராட்டுகிறோம். எனினும் இந்த பரிந்துரைக்குமாறாக கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் இடம்பெற்றிருக்கும் மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை ஒன்றிய அரசு இக்காலகட்டத்தில் பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
இதுமட்டுமின்றி ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது. ஒருபுறம் ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் ஒன்றியஅரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு 50 விழுக்காடு பங்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட இயலும். எனவே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு திட்டங்களுக்கு உரிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்
சட்டத்திருத்தங்கள் வாயிலாக ஒரு உச்சவரம்பை இந்த நிதிக்குழு பரிந்துரைத்தது. மாநில அரசுகளுக்கான 50 சதவீதம் வரிப்பகிர்வை உறுதி செய்திடும் என்று நான் நம்புகிறேன்.
மாநிலங்களுக்கு இடையேயான வரிப்பகிர்வினை முறைபடுத்துவதில் சமச்சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது. 9-வது நிதிக் குழு பரிந்துரைத்த 7.831 சதவீதத்திலிருந்து கடந்த 15-வது நிதித் குழுபரிந்துரைப்படி 4.079 சதவீதமாக தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது. நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செம்மையான நிர்வாகத்தை தொடர்ந்து நல்கி வரும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தொய்வடையச் செய்து தண்டிப்பதைப் போல தற்போதைய வரிப் பகிர்வு முறை அமைந்துள்ளது என்பதை நான் சுட்டிக் காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
எனவே, சமச்சீரான வளர்ச்சியையும், திறமையான நிர்வாகத்தையும் இந்த வரிப் பகிர்வு முறையில் சமக்குறிகோள்களாகக் கருதி இந்த நிதிக் குழு தனது பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம். நாட்டின் சமச்சீரான வளர்ச்சியை எதிர்நோக்கும் வகையில் வளர்ச்சி குன்றிய பகுதிகளுக்கு தேவையான நிதியை வழங்குவது அவசியம் என்றாலும் அதே வேளையில், பல்வேறுவகையிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை அளிப்பதன் மூலமாகவே அவற்றின் வளர்ச்சியைத் தக்கவைப்பதுடன் அந்த மாநிலங்களின் வளர்ச்சிப் பாதைக்கும் வழிவகுக்க முடியும், என்பதையும் நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியைக் குறைத்து வளர்ச்சியை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு நிதி ஆதாரங்களை மடைமாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாக கிடைக்கும் வரிப்பகிர்வும் குறைந்துவிடும் என்பதே உண்மை.
குறுகிய காலக் கண்ணோட்டத்தோடு செயற்கையாக உருவாக்கப்படும் நிதி மறுபகிர்வுமுறை எதிர்காலத்தில் எதிர்பார்த்த பலன்களை தராது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு சிறந்த நிர்வாக அமைப்புடன் திறம்பட செயலாற்றி வரும் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வகையில் நிதிப் பகிர்வு முறையை மாற்றுவதன் மூலம் இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்களிப்பு செய்திட முடியும்.
முந்தைய நிதிக் குழுக்களின் பரிந்துரைகளைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது, கடந்த காலங்களில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு தொடர்ந்து அதிக நிதியை வழங்கிய போதும், பல மாநிலங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
கடந்த 45 ஆண்டுகளாக நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் மறுபகிர்வு முறையின் மூலம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி ஏற்படவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, 16-வது நிதிக் குழு இத்தகைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து நாட்டின் பின்தங்கிய மாநிலங்களுக்கு உரிய நிதி ஆதாரங்களை வழங்கிடும் போது, வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியைப் பாதிக்காத அளவில், தேவையான நிதியை வழங்குவதற்கான ஒரு புதிய அணுகுமுறையை வடிவமைப்பதற்கான தேவை இன்று உருவாகி இருப்பதாகவே நம்புகிறேன்.
தமிழ்நாடு சந்திக்கும் சவால்கள்
இந்நிலையில், தமிழ்நாடு சந்தித்து வரும் மூன்று குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக, இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தினால் தமிழ்நாடு பெரும் பேரிழவினை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு புயல்கள் மற்றும் இடைவிடாத மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்களின் உயிர், உடைமை மற்றும் வாழ்வாதாரம் மட்டுமின்றி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இயற்கைப் பேரிழிவுகளினால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்வதற்கு பெரும் அளவிலான நிதி மாநில அரசால் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளதால், வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் இதன்காரணமாக மாநில மக்கள் தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றம் குறித்தும் நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது உத்திரப்பிரதேச மாநிலத்தின் சராசரி அளவை விட 9.5 ஆண்டுகள் அதிகம். 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் முடிவடையும் பொழுது தமிழ்நாட்டின் சராசரி வயதானது 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி, நாட்டிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.
தமிழ்நாடு இதுவரை பெற்று வந்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான பயன் வேகமாகக் குறைந்து வருவதையும் சமூகப் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது. அதிகரித்து வரும் முதியவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு, தேவையான பொருளாதார வளர்ச்சியினை அடைவதுடன் பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை உடனடியாக செய்ய வேண்டியுள்ளது.
அந்த முயற்சியை மேற்கொள்ளாவிடில் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்னால், முதியவர்கள்அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயத்தை இன்று சந்தித்து வருகிறது. இந்த மிகமுக்கியமான கருத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், இந்த சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவதாக, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நகர்ப்புர கட்டமைப்பு வசதிகளை உ உருவாக்குவதும், அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவதும் தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கிறது. குறைவான நில வளம் மற்றும் நீர் வளம் ஒருபுறம், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை மறுபுறம் இவற்றுக்கு இடையே சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்திடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்திடத் தேவையான முதலீடுகளைச் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் தரமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கிடவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் மானியங்களை வழங்கிட நிதிக்குழு பரிந்துரை செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சரக்கு சேவை வரி
மாநிலங்களின் செலவினங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உயர்ந்து வரும் வேளையில் சரக்கு மற்றும் சேவை வரி (GST)முறை நடைமுறைக்கு வந்த பின்னர் மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்குவதில் பல தடைகளை சந்தித்து வருகின்றன. இதனால் ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வை மாநிலங்கள் மிகவும் சார்ந்திருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில் 16-வது நிதிக்குழுவின் பங்கும், அதன் பரிந்துரைகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
16-வது நிதிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் பணிவுடன் சொல்லிக் கொள்வதெல்லாம் தமிழ்நாட்டின் 8 கோடி மக்களும் இந்த நிதிக்குழுவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்திடும் நோக்கில் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு அரியவாய்ப்பை காலம் நமக்கு வழங்கி இருக்கிறது. இதைக் கருத்திற்கொண்டு 16-வது நிதிக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழ்நாடு அரசின் சார்பாக நிதிக்குழுவின் பரிசீலனைக்கு வழங்கப்பட இருக்கும் விரிவான அறிக்கையினை கவனத்துடன் பரிசீலித்து, கடந்த காலங்களில் பல்வேறு நிதிக்குழுக்களின் பரிந்துரைகளினால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை 16-வது நிதிக்குழு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். சமச்சீரான வாய்ப்புகளை வழங்கும் முற்போக்கான அணுகுமுறையின் மூலமாகவே இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை அடைந்திட இயலும் என்பது எங்களுடைய திடமான நம்பிக்கை. ஒவ்வொரு மாநிலமும் அவற்றின் முழு திறனுக்கு ஏற்றவகையில் வளர்ச்சியை எட்டுவதன் மூலமாகவே இந்தியத் திருநாட்டை உலக அரங்கில் பொருளாதார வலிமை கொண்ட ஒரு மாபெரும் நாடாக நிலைநிறுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் 16-வது நிதிக்குழு கூட்டத்தில் உரையாற்றினார்.