இறப்பு என்பது தவிர்க்க முடியா ஒன்று. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறப்பு என்பது நிச்சயம். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ள மனது தான் மறுக்கிறது. முதிர்ந்த வயதில் உயிரிழப்பு என்பது சாதாரணமாக நடைபெறுவது. ஆனால் வாழும் வயதில் ஏற்படும் திடீர் மரணங்கள் அந்த குடும்பத்தினையும், அவர்களின் நெருக்கமான உறவுகளையும் நிலைகுலைய வைக்கிறது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான நியதி. அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று கோவை நகரையே உலுக்கியிருக்கிறது.
தங்கள் பிள்ளைபோல் வளர்த்த நாயை ஒரு நாள் பராமரிப்பில் விட்ட போது அன்று மாலையே உயிரிழந்திருக்கிறது. இதனால் அக்குடும்பமே ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறது. கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் சஞ்சு என்ற நாயை கடந்த 11 ஆண்டுகளாக தங்கள் பிள்ளை போல் வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் மீது அவர் மட்டுமல்லாது அவர் குடும்பத்தினைச் சேர்ந்த அனைவரும் மிகுந்த பாசமாக இருந்திருக்கின்றனர். வீட்டில் ஒருவராக சஞ்சு வளர்ந்திருக்கிறது.
இந்நிலையில் சரத் தங்கையான ஸ்ருதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி அவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்திருக்கிறது. அச்சமயத்தில் செல்லப்பிராணியைப் பராமரிக்க வீட்டில் யாரும் இல்லா சூழலில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள விலங்குகள் நல மையத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்பிற்காக 21-ம் தேதி காலை விட்டுச் சென்றுள்ளனர். இதற்குக் கட்டணமாக ரூ. 1200 செலுத்தியிருக்கின்றனர்.
பாம்பன் சாலைப் பாலத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு..? உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் சொல்வது என்ன?
இந்நிலையில் சஞ்சு என்ற அந்த நாய்க்கு உடல் நிலை சரியில்லை என சரத் எண்ணிற்குத் தொலைபேசி அழைப்பு வர, பதறிப் போய் ஓடிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் குடும்பமே பிள்ளையாய் ஆசையாய் வளர்த்த நாய் இறந்து கிடந்தது. இதனால் சரத் மற்றும் அவரின் தாய், தந்தை உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்க அவர்கள் முறையான பதில் தராததால் கோவை சாய்பாபா காலனியில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்ல நாயைக் கண்டு அவர்கள் கதறித் துடித்தது பார்த்தவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்டுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.