அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில், புறப்பட தயாராக இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட H1B விசா விதிமுறைகள் குறித்த தகவல் வெளியானதையடுத்து, இந்தியா செல்லவிருந்த பல பயணிகள் பீதியடைந்து, விமானத்தில் இருந்து உடனடியாக இறங்க கோரிக்கை விடுத்தனர். இதனால், விமானம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது.
செப்டம்பர் 20 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புதிய H1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணமாக விதிக்கப்படும் என அறிவித்தார். இது, அமெரிக்க பயணத்தை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது. இதுவரையில், ஒரு H1B விசா விண்ணப்பத்திற்கு $2,000 முதல் $5,000 வரை மட்டுமே கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது.
ட்ரம்ப் தனது முடிவுக்கு பின்னால், அமெரிக்காவில் கணினி அறிவியல் பட்டதாரிகள் மத்தியில் அதிகரித்து வரும் வேலையின்மை, H1B பணியமர்த்தலால் அமெரிக்கர்களுக்கு வேலை இழப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு அபாயங்கள் போன்ற காரணங்களை குறிப்பிட்டார். அமெரிக்கர்களுக்கான வேலைகளை பாதுகாப்பதே தனது நோக்கம் என்று அவர் கூறினார்.
சான் பிரான்சிஸ்கோ விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து, நேரில் கண்டவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பகிர்ந்தனர். ஒரு பயனர் தனது பதிவில், “துர்கா பூஜாவுக்காக இந்தியா செல்லவிருந்த இந்தியர்கள் நிறைந்த சர்வதேச விமானம், புறப்பட தயாராக இருந்தபோது, புதிய H1B விசா விதிமுறைகள் குறித்த செய்தி பரவியது. இதனால் விமானத்தில் இருந்த இந்தியர்கள் பீதியடைந்து, விமானத்தில் இருந்து இறங்க கெஞ்சினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவு செப்டம்பர் 21-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததால், மைக்ரோசாஃப்ட், அமேசான், மற்றும் ஜேபி மோர்கன் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் H1B விசா வைத்திருக்கும் ஊழியர்களுக்கு அவசரமாக திரும்பி வருமாறு அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், இது ஆண்டுதோறும் விதிக்கப்படும் கட்டணம் அல்ல, ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணம் என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தெளிவுபடுத்தினார். இருப்பினும், இந்த விளக்கம் மக்களின் அச்சத்தை போக்கவில்லை.
வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இந்த H1B விசாக்கள், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக்கூடியவை. புதிய விசா விண்ணப்பங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த $100,000 கட்டணம், இந்திய வல்லுநர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள H1B விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த விவகாரம் இந்தியர்கள் மத்தியில் ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தாங்கள் அமெரிக்க கனவை தொடர எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
