2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு குறித்த தகவல்கள் ஆளுங்கட்சியான திமுகவின் நிழலில் இயங்கும் தலைமைகளுக்கு பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. “உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று தேர்தல் பிரசாரத்தில் விஜய் அதிரடியாக பேசியதை தொடர்ந்து, தற்போது ராகுல் காந்தியை அவர் சந்திக்கவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் ஒரு பூகம்பத்தை கிளப்பியுள்ளன.
கேரள சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி விரைவில் வரவிருக்கும் நிலையில், அங்கு அவரை சந்திப்பதற்காக விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு “வெறும் மரியாதை நிமித்தமானது” என்று வெளியே சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் திமுக கூட்டணியை அசைத்து பார்க்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் வியூகம் ஒளிந்திருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின், சில கோடிகளுக்கு காங்கிரஸின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கிவிட்டார் என்று விஜய் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், ராகுல் காந்தியுடனான இந்த சந்திப்பு செல்வப்பெருந்தகை தலைமையிலான மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டிருப்பதும், கட்சியின் சுயமரியாதை அடகு வைக்கப்பட்டிருப்பதும் பல மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருப்பதாக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜய்யின் மதச்சார்பற்ற கொள்கைகள் ராகுல் காந்தியின் சிந்தனையோடு ஒத்துப்போவதால், தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க ராகுல் காந்தியே விஜய்க்கு மறைமுக ஆதரவு அளிக்கிறாரா என்ற சந்தேகம் திமுகவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இப்படி ஒரு சந்திப்பு நடந்தால், திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்யும் காங்கிரஸ் தொண்டர்கள் கூட, விஜய்யின் “விசில்” சின்னத்திற்கு ஓட்டு போடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இந்த சந்திப்பு நிகழ்ந்தால், அது தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய “சுனாமி” மாற்றத்தை கொண்டு வரும். திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸின் வாக்கு வங்கி ஒரு முக்கியமான துருப்பு சீட்டாக இருந்து வந்தது. ஆனால், விஜய்யும் ராகுலும் கைகோர்த்தால், அந்த வாக்குகள் மொத்தமாக தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் திரும்பும். “உண்மையான காங்கிரஸ்” விஜய்யின் பின்னால் அணிவகுத்தால், திமுகவின் தேர்தல் கணக்குகள் அனைத்தும் தவிடுபொடியாகும். 2026-ல் ஒரு புதிய அரசியல் சகாப்தத்தை நோக்கித் தமிழகம் நகரப்போகிறது என்பதற்கான மிக முக்கியமான அறிகுறியாகவே இந்த ராகுல் – விஜய் சந்திப்பு செய்திகள் பார்க்கப்படுகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
