தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’, ஏற்கனவே பலமான அரசியல் கட்சிகளுக்கு சவாலாக திகழ்ந்து வருகிறது. விஜய்யை அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாத சில தரப்பினர், தற்போது அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை விமர்சன பொருளாக்கி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒருவருடைய குடும்ப விஷயம் என்பது முற்றிலும் தனிப்பட்டது; அதில் மூன்றாவது நபர்கள் தலையிடுவதோ அல்லது அதை கொண்டு கும்மியடிப்பதோ நாகரிகமான செயல் அல்ல. அரசியல் களத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு தலைவரின் பிம்பத்தை சிதைக்க, அவரது குடும்ப உறுப்பினர்களைக் கையாள்வது என்பது அரசியல் ரீதியான திராணியற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது.
சமூக வலைதளங்களின் வளர்ச்சி, பலருக்கு வருமானம் ஈட்டும் ஒரு தளமாக மாறியிருந்தாலும், அதில் சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. விஜய்யின் குடும்பம் குறித்து பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள், குறிப்பிட்ட சிலருக்கு நல்ல ‘வியூஸ்’ மற்றும் வருமானத்தை தேடித்தரலாம். ஆனால், ஊடக அறத்தையும் சமூக பொறுப்பையும் மறந்து, ஒரு தனிமனிதனின் அந்தரங்கத்தை சந்தைப்படுத்துவது கேவலமான செயல். இத்தகைய கீழ்த்தரமான விமர்சனங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
அரசியல் எதிரிகள் விஜய்யை வீழ்த்த நினைக்கும் இந்த உத்தி, பல நேரங்களில் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்தும். தமிழக வரலாற்றை பார்த்தால், ஒரு தலைவரை தனிப்பட்ட முறையில் தாக்கும்போது மக்கள் மத்தியில் அவர் மீது ஒரு மிகப்பெரிய அனுதாப அலை உருவாவதை நாம் கண்டிருக்கிறோம். உதாரணமாக, கரூரில் நடந்த சோகமான நிகழ்வு எப்படி ஒரு கட்டத்தில் விஜய்க்கு ஆதரவாக மாறியதோ, அதேபோல் விஜய்யின் குடும்பத்தை டார்கெட் செய்வது அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு பெரும் அனுதாப அலையை தேடித்தர வாய்ப்பும் உண்டு. விஜய்யின் எதிரிகள் தங்களின் அறியாமையால், அவருக்கு ஒரு மிகப்பெரிய ‘சிம்பதி கார்டை’ அவர்களாகவே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய்யின் குடும்பத்தை பற்றி பேசுவதன் மூலம் அவரை மனதளவில் பலவீனப்படுத்தி விடலாம் என்று சிலர் கணக்குப்போடுகிறார்கள். ஆனால், ஒரு நடிகராக பல சோதனைகளைக் கடந்து வந்த விஜய்க்கு, அரசியலில் இத்தகைய சில்லறைத் தனமான தாக்குதல்கள் புதியவை அல்ல. மாறாக, இத்தகைய செயல்கள் விஜய்யின் ஆதரவாளர்களையும், ரசிகர்களையும் இன்னும் ஆவேசத்துடன் செயல்பட தூண்டும். தனது இமேஜை சிதைக்க நடக்கும் இத்தகைய சதித்திட்டங்களை விஜய் அமைதியாகவும், முதிர்ச்சியுடனும் கையாள்வது, அவரை ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவராகவே மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தும்.
எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் விஜய்யின் கொள்கைகளை பற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு, குடும்ப விஷயங்களை கையில் எடுப்பது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது. “அரசியல்ன்னா கொள்கையை சொல்லு, திட்டத்தை சொல்லு, அதை விட்டுட்டு ஏன் குடும்பத்துக்குள்ள போற?” என்ற கேள்வி சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் எழ தொடங்கியுள்ளது. சொந்த காசில் சூனியம் வைப்பது போல, விஜய்யின் எதிரிகள் செய்யும் இந்த தவறான பிரச்சாரங்கள், நடுநிலை வாக்காளர்களையும் விஜய் பக்கம் திருப்பும் வாய்ப்பு உள்ளது. குடும்பங்களை அரசியலுக்கு இழுப்பது என்பது ஒரு இருமுனை வாள் போன்றது; அது எதிரிகளை விட அதை ஏந்துபவர்களையே அதிகம் காயப்படுத்தும். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை குறை சொல்லும் தலைவர்கள் என்ன யோக்கியமா? என்ற பதில் கேள்வியும் மக்கள் மத்தியில் எழும்.
இறுதியாக, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள், தரம் தாழ்ந்த தனிமனித தாக்குதல்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். விஜய் தனது அரசியல் பயணத்தில் எதிர்கொள்ளும் இத்தகைய தடைகள், அவரை இன்னும் வலிமையான சக்தியாகவே மாற்றும். ஒரு தலைவரை அவரது செயல்பாடுகளுக்காக விமர்சிக்கலாமே தவிர, அவரது குடும்பத்திற்காக அல்ல. இந்த கசப்பான அரசியலை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்; வரும் 2026 தேர்தலில் இத்தகைய கீழ்த்தரமான உத்திகளை கையாள்பவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
