உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

By TM Desk

Published:

முனீஸ்வரர் வழிபாடு

ஆன்மீக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புற பகுதி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் முனீஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. பெரும்பாலும் சிலை வடிவத்தில் இருப்பதில்லை. சிவலிங்கம் அல்லது உயரமான நடுகல் போன்ற தோற்றத்தில் முனீஸ்வரர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும் .

கடந்த சில பத்தாண்டுகளாக முனீஸ்வரர் வழிபாடு பற்றிய தகவல்கள் நம்முடன் மறைந்து போய்விட்டன. சிவபெருமானின் முதன்மை மெய் காவலர்களில் ஒருவராக முனீஸ்வரர் இருக்கிறார். சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை என்பது மக்களின் நம்பிக்கை. முனீஸ்வரரின் ஜென்ம நட்சத்திரமும் அதே திருவாதிரை என்பது சித்தர்கள் கூறும் ஜோதிட உண்மையாகும்.

கலியுகம் செல்லச்செல்ல சராசரி மனிதர்களுக்கு எதிர்பாராத அவமானங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இது அனைத்தும் அவரவர் முற்பிறவி கர்ம வினைகளின் விளைவு ஆகும்.

இருந்தபோதிலும் ஓரளவாவது பக்தியுடன் இருப்பவர்களுக்கு இந்த எதிர்பாராத அவமானங்கள் வராது அல்லது வரும் அவமானங்களை தாங்கும் மன உறுதியை தரக்கூடிய வழிபாடுகளில் ஒன்றாக முனீஸ்வரர் வழிபாடு இருக்கிறது.

வடமாவட்டங்களில் மஹாமுனி,ராஜமுனி, தர்ம முனி, விஜய முனி என்ற பல பெயர்களில் முனீஸ்வரர் ஆலயங்கள் உள்ளன.

தன் மாவட்டங்களில் பெரும்பாலும் பாண்டிமுனி, ஜடாமுனி என்ற பெயர்களில் முனீஸ்வரர் ஆலயங்கள் உள்ளன.

மதுரை மாட்டுத்தாவணி அருகில் அமைந்திருக்கும் பாண்டி முனீஸ்வரர் கோயில் உலகம் முழுக்க பிரபலமான ஆலயமாகும்.

அதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு பெயர்களில் முனீஸ்வரன் ஆலயங்கள் உள்ளன.

பல ஊர்களில் மன்னர் அல்லது குறுநில மன்னர்கள் அல்லது ஜமீன்தார்களுக்கு ராஜ குருவாக வாழ்ந்து அருள் வாக்கு சொன்னவர்களும் ஜீவ சமாதி ஆகி முனீஸ்வரர் கோயில்களாக பிரபலம் அடைந்து உள்ளன.அங்கே வருடாந்திர குரு பூஜை விழாக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய ராகுகால நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் முனீஸ்வரர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்வது நன்று. அந்த சமயத்தில் நாம் மனமுருகி செய்யும் பிரார்த்தனை ஒரு நாள் அல்லது ஒரு சில நாட்களில் முனீஸ்வரர் வரமாக கிடைத்து வருகிறது.

முனீஸ்வரருக்கு பிடித்த பொருட்கள் புனுகு, சுருட்டு பீடிகள், ஜவ்வாது, நாட்டு புற மது பானம் ஆகும். பல முனீஸ்வரர் கோவில்களில் ஆடு,கோழி, சேவல் பலியிடுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

2.1.2022 ஞாயிற்றுக் கிழமையும் அமாவாசை திதியும் சேர்ந்து வருவதால் இந்த நாளில் உங்கள் ஊரில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு சென்று மாலை 4.30 முதல் 6 மணி வரை இருந்து பிரார்த்தனை செய்யுங்கள்.

பெண்களும் இது போன்று பிரார்த்தனை செய்து வழிபடலாம். பூர்வீக சொத்து பிரச்சனை ,குழந்தையின்மை பிரச்சனை மற்றும் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாத சூழ்நிலை, வருமானப் பற்றாக்குறை, மறைமுக தொல்லைகள் போன்றவைகளுக்கு முனீஸ்வரர் வழிபாடு விரைவான தீர்வாக அமைந்து இருக்கிறது.

நீண்ட காலமாக இருக்கும் வாழ்க்கை சிக்கல்கள் தீர:-

தொடர்ந்து ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகள் முனீஸ்வரர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் அடுத்த சில வாரங்களில் அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். அவ்வாறு செல்பவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிச் சென்று அவருக்கு படைக்க வேண்டும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499