வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சினைகளும் படிப்படியாக மறையும்.
ஞாயிறு:
ஞாயிற்றுக்கிழமை ஐயப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.
திங்கள்:
திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணெய் கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத் தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச்சாந்தியைத் தரும் வழிபாடு இது.
செவ்வாய்:
செவ்வாய்க் கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.
புதன்:
புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்த புத்தி அகலும்.
வியாழன்:
வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசி மாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.
வெள்ளி:
வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய் காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் தேவையற்ற செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.
சனி:
சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீபம் ஏற்றுவதால் பித்ரு சாபங்கள் நீங்கும்.