முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடக்கூடாது. அதனால் ஒரு காரியத்தைத் துவங்கும்போது அதை முறையாக செய்ய வேண்டும். நமது வீட்டில் உள்ள பூஜை அறைக்குச் சென்று கடவுளை, குலதெய்வத்தைக் கும்பிட்டு விட்டு வெளியே செல்ல வேண்டும். அடுத்து கோளறு பதிகம் முக்கியம்.
ஞானசம்பந்தப்பெருமானை மதுரைக்கு அழைத்து வர வேண்டும் என்று ஒரு அழைப்பு வருகிறது. அப்பர் உடன் இருக்கிறார். அவர் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர். நாளும் கோளும் இப்போது சரியில்லை. கொஞ்சம் நாள் கழித்து போகலாம் என ஞானசம்பந்தரிடம் சொல்கிறார்.
அதற்கு ஞானசம்பந்தர் அப்பரே நீங்களே இப்படி சொல்லலாமா..? இந்த நாளும் கோளும் நமக்கு இல்லை. நம்ம தலைவர் தான் நாளையும், கோளையும் இயக்குகிறார். சிவனடியார்களை இது பாதிக்காது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்று தான் கடவுள் நமக்கு இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்.
அப்போது அவர் பாடிய பாடல் தான் இந்த கோளறு பதிகம்.
எல்லா சிவன் கோவில்களிலும் சென்று பார்த்தால் அங்கு பெரிய எழுத்துக்களில் எழுதிப் போட்டு இருப்பார்கள்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே..!
இப்படி எல்லாப் பாடல்களையும் பாடி மதுரை சென்றார் ஞானசம்பந்தர். அங்கும் அவருக்கு பிரச்சனை தான். அவர் இருந்த திருமணத்திற்கு தீ வைக்கப்பட்டது. அனல் வாதம், புனல் வாதம் நடத்தி தான் ஜெயித்துள்ளார். கூன் பாண்டியனுக்கு வெப்பு நோய். இதைப் போக்க பலவாறு முயற்சி செய்தார். இவை எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார்.
ஆரம்பத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இந்த கோளறு பதிகம் பனிபோல் விலக்கி விடும். அதனால் தான் நாம் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது இந்த கோளறு பதிகத்தைப் படித்து விட்டு தான் வெளியே செல்ல வேண்டும்.
அதனால் செல்லும் காரியத்தில் வெற்றி கிடைக்கும். அதேபோல் பாதயாத்திரை, புனித யாத்திரை சென்றால் அருணாசலகிரிநாதரின் இந்தப்பாடலைப் பாடிச் செல்லலாம்.
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்நிற
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே
இந்த நாலுவரிகள் உங்கள் பயணத்தை இனிதாக்கும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது அம்மாவின் கையால் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டுச் செல்வது ரொம்ப ரொம்ப விசேஷம். வெற்றி உனதாக அமையும். அம்மா இல்லாதவங்க மனைவி கையால தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம்.
இது சாதாரண விஷயம் இல்லை. அவர்களது அன்பு ஒரு அரணாகவே நம் உடனே கூட வரும். முக்கியமான மங்கலகாரியத்திற்குச் சென்றால் குலதெய்வத்திற்கு மஞசள் துணியில் காணிக்கையை முடிஞ்சு வைத்து விட்டுச் செல்லுங்கள்.