இன்று அனைவரும் வேகமாக இந்த உலகில் இயங்கி கொண்டிருப்பதே மாத கடைசியில் ஒரு சம்பளம் வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான். நமக்கு தேவையான விஷயங்களை வாங்குவதற்கு பணம் ஒரு இன்றியமையாத விஷயமாக பார்க்கப்படும் நிலையில், நாம் அனைவரின் வாழ்க்கையும் அதன் அடிப்படையில் தான் உள்ளது.
ஆனால், அதே வேளையில் இந்த ‘சம்பளம்’ என்ற வார்த்தைக்கு பின்னால் ஒரு மிகப் பெரிய வரலாறே உள்ளது என்பது பலருக்கும் தெரியாத வியப்பான தகவல். தமிழில் நாம் பயன்படுத்தப்படும் நிறைய வார்த்தைகளின் பின்னணி மற்றும் அர்த்தங்கள் பலருக்கும் எட்டாத தகவல்கள் தான். மேலும் சில வார்த்தைகள் தமிழ் என நாம் நினைக்கும் போது அது வேற்று மொழி வார்த்தைகளின் பின்னணியுடன் இருக்கும்.
இது பற்றி புதிதாக தகவல்கள் நமக்கு தெரியும் போதே ஒரு வித சிலிரிப்பு உருவாகும். அப்படி ஒரு பின்னணி தான் சம்பளம் என்ற வார்த்தைக்கு பின்னாலும் உள்ளது. ஒருவர் புதிதாக வேலைக்கு போவது சம்பளம் எவ்வளவு என்ற அடிப்படையில் தான். அதே போல, ஒரு மகன் முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வரும் போது பெற்றோர்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
மேலும் ஒருவன் பணக்காரனா அல்லது ஏழையா என்பதை கூட இந்த பணமும், சம்பளமும் தீர்மானிக்கும் பொருட்டாக இருக்கும் நிலையில், நாம் அடிக்கடி பேசும் வார்த்தைகளில் முக்கியமான ஒன்றாகவும் இந்த சம்பளம் உள்ளது.
ஆனால், நாம் அனைவரும் நினைப்பது போல இந்த சம்பளம் என்பது ஒற்றை வார்த்தை கிடையாது. இதன் பின்னணி என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். முன்பு எல்லாம் சம்பளம் என்பதற்கு பதிலாக ஒருவர் வாங்குவதை ஊதியம் என்பதை குறிப்பிட்டு வந்தனர். ஆனால், பின்னாளில் தான் சம்பளம் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அந்த சமயத்தில் செய்த வேலைக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக, நெல்லையும் உப்பையும் ஊழியர்களுக்கு கொடுத்துள்ளனர். இதில் நெல் என்பதற்கு சம்பா என்ற ஒரு பொருள் உள்ளது. அதே போல, உப்பும் அளத்தில் விளைவது என்பதால், சம்பா + அளம் என குறிப்பிட்டு வந்துள்ளனர்.
இந்த சம்பா, அளம் என்ற வார்த்தை சேர்ந்து தான் பின்னாளில் சம்பளம் என்ற வார்த்தை உருவாகி உள்ளது. இதுவே நாளடைவில் சம்பளமாக அதிகம் மக்கள் பயன்படுத்த, அதன் பின்னர் இப்படி ஒரு கதை உள்ளது என்பதே பலருக்கும் தெரியாத உண்மை.