சிவ வழிபாட்டில் வில்வ இலை முக்கியமானது. வில்வ இலைகளால் அர்ச்சிக்கப்படும்போது சிவன் மனம் மகிழ்கிறார். மற்ற எல்லா இலைகளைவிட வில்வ இலைக்கு எப்படி வந்தது இந்த மகத்துவம்ன்னு தெரிந்துக்கொள்ளலாமா?!
வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். ஒரு வில்வ இலையானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என பூஜைகளுக்கான விதி சொல்கிறது. ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும். வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும், உலர்ந்து போனாலும்கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்ற மலர்களையோ இலைகளையோ அந்தமாதிரிப் பயன்படுத்தக் கூடாது. அதேப்போல், ஒருமுறை பூஜைக்கு பயன்படுத்திய எந்த மலரையோ இலைகளையோ மீண்டும் பயன்படுத்துவதில்லை. ஆனால், வில்வ இலையை பயன்படுத்தலாம். இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு..
வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இது மும்மூர்த்திகளும் ஒருசேர அமைந்த அமைப்பாகும். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது சைவத்தில் இருப்பது போலவே வைணவத்திலும் இந்த வில்வம் திருமகளுக்கு அர்ச்சிக்கப்படுகிறது.
இனி சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனைப்பொருளான காரணத்தை பார்க்கலாம்.
ஒருசமயம் சிவபெருமான் உமாதேவியுடன் கைலாய மலைசாரலில் உள்ள ஒரு சோலையில் வில்வ மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அன்றைய தினம் ஓர் சிவராத்திரி. வில்வ மரத்தின்மீது இருந்த குரங்கு வில்வ இலைகளை பறித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. அந்த இலைகள், மரத்தின் அடியில் வீற்றிருந்த சிவபெருமான் மீதும், பார்வதிதேவி மீதும் விழுந்து கொண்டே இருந்தது. இதைக்கண்ட பார்வதிதேவிக்கு குரங்கின்மீது கோபம் ஏற்பட்டது. உடனே சிவபெருமான், உமையே! குரங்கின் மீது கோபம் கொள்ளாதே! அது நம் ருவரையும் வில்வ இலைகளால் அர்ச்சிக்கிறது எனக்கூறி, குரங்கிற்கு அருளுமாறு பார்வதிதேவிக்கு கட்டளை பிறப்பித்தார்.
பார்வதிதேவி குரங்கினை அழைத்தாள். மரத்தின்மீதிருந்த குரங்கு கீழே இறங்கி வந்து சிவனை வணங்கியது. அப்பனே! நான் பிழை செய்துவிட்டேன். என்னை மன்னிப்பீராக! என்று வேஎண்டியது. அதைக்கேட்ட சிவன், உன்னுடைய செயல் எமக்கு மகிழ்ச்சியை தந்தது. அதை வழிபாடாக ஏற்றுக்கொண்டோம். நீ எங்களை வில்வத்தால் பூஜை செய்த பலனாக, சோழக்குலத்தில் தோன்றி உலகை ஒரு குடையின்கீழ் ஆளும் சிறப்பை பெற்று வாழ்வாயாக! என ஆசீர்வதித்தார். வரம் பெற்ற குரங்கு சிவனை வணங்கி, “அய்யனே! அடுத்த பிறப்பிலும் உமது திருவடிகளை மறவாது பூஜிக்க” அருள்புரிவதோடு, அடுத்த பிறவியிலும் குரங்கு முகமே இருப்பதுபோல் சிவபெருமானும் அந்த வரத்தை வழங்கினார். அந்த வரத்தின்படி, அந்த குரங்கானது கருவூரில் மாந்ததா என்ற சோழ மன்னனுக்கு மகனாக பிறந்தது. அந்த குழந்தை முசுந்தன் என்று பெயர் பெற்று வளர்ந்து நாட்டின் அரசன் ஆனான். சிவனை மறவாது கருவூர் பசுபதீஸ்வரப் பெருமாள் கோவிலில் திரிப்பணிகள் செய்தான். உலகின் உள்ள பல சிவ தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தான். பகுத்தறிவற்ற குரங்கு பறித்தெறிந்து வில்வம் தனது திருமேனியில் விழுந்ததாக, அந்த குரங்கிற்கு பெரும் சிறப்பு தந்த சிவபெருமானை அன்போடு, பக்தியோடு, வில்வ அர்ச்சனை செய்து பூஜித்தால் நாமும் அது போன்ற பலனை பெறலாம். சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வணங்கினால் அளப்பரிய பலனை பெறலாம்.
திருச்சிற்றம்பலம்!!!