இல்லத்தின் சமையல் ராணியாக வலம் வர விதவிதமாக சமைக்க தெரிந்தால் மட்டும் போதாது, பார்த்து பார்த்து செய்யும் சமையல் சொதப்பிவிட்டால், அதை பக்காவாக சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட அவசர நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்க உதவும் 10 டிப்ஸ்கள் இதோ…
- ரசம் வைக்கும் போது தக்காளியை முதலிலேயே சேர்ப்பதற்கு பதிலாக ரசம் வைத்து முடித்ததும் தக்காளியைத் துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சேர்த்துவிட்டால், ரசம் சுவையாக இருக்கும்.
- பாயாசத்தில் முந்திரியை வறுத்து சேர்க்கும் போது கறுத்து விடாமல் இருக்க, ஒரு கரண்டி பாயாசத்தை எடுத்து, அதில் முந்திரியை உடைத்துப்போட்டு, மிக்ஸியில் அரைத்து பாயாசத்தில் சேர்த்துவிட்டால், சுவையாக இருக்கும்.
- தேங்காய் பர்பி செய்யும் போது, ஏலக்காயுடன், ஒரு கிராம்பும் பொடித்துச் சேர்த்தால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
- மோர்க்குழம்பு மீதமாகிவிட்டால், சிறிதளவு கடலை மாவைப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொண்டு எண்ணெயில் பொரித்துக் குழம்போடு சேர்த்தால் வடைகறி போல் ருசியாக இருக்கும்.
- பால் அடிப்பிடித்து தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையைப் போட்டால் அடிப்பிடித்த வாசனை போய் விடும்.
- இரண்டு வாழைப்பழம் மற்றும் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பாயாசம் தயார்.
- பீட்ரூட் அல்வா செய்யும் போது, பீட்ரூட்டை பாலில் வேக வைத்துவிட்டு, பிறகு மசித்து அல்வா செய்தால் சுவையாக இருக்கும்.
- மோர் நிறைய மீந்துவிட்டால், அதில் ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பைப் போட்டு வைத்தால் விரைவில் புளிக்காமல் இருக்கும்.
- வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காமல் இருக்கும்.
- தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்து விட்டால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிட்டால், தினமும் இரண்டு வேளை தண்ணீரை மாற்றினால் நான்கு நாட்களானாலும் தேங்காய் கெடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.