குழந்தை விடாமல் அழுகிறதா அப்போ இதையெல்லாம் கவனிக்க தவறி விடாதீர்கள்!

By Sowmiya

Published:

குழந்தை பேச தொடங்கும் வரை அதனுடைய மொழி அழுகை மட்டும்தான். பசி, தூக்கம், வலி, சோர்வு, உறக்கம் இப்படி அனைத்தையும் குழந்தை அழுகை மூலம் மட்டுமே வெளிப்படுத்தும். பல பெற்றோர்களுக்கு குழந்தை ஏன் அழுகிறது என்றே சில சமயம் புரியாமல் போய்விடும்.

baby 215303 1280

எனவே குழந்தை எதற்கெல்லாம் அழும் என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொண்டால் பெற்றோர்களுக்கு குழந்தையை சமாதானம் செய்ய எளிதாக இருக்கும்.

1. பெரும்பாலும் குழந்தை அழுத உடனே பலரும் சொல்வது குழந்தைக்கு பசிக்கிறது என்றுதான். குழந்தைக்கு பசி எடுத்தால் அழுவது இயல்பு என்றாலும் இப்பொழுதுதான் பால் கொடுத்தீர்கள் என்றால்‌ அடுத்த இரண்டு மணி நேரம் வரை குழந்தைக்கு பசிக்காது அப்போது குழந்தை கண்டிப்பாக பசிக்காக அழுகாது. பால் கொடுத்து வெகு நேரம் ஆகி இருந்தாலோ அல்லது குழந்தை சிறுநீர் அல்லது மலம் கழித்து விட்டாலோ சில சமயங்களில் உடனடியாக பசிக்க நேரிடலாம் எனவே குழந்தைக்கு பசி எடுக்கிறதா என்று பார்க்கவும்.

istockphoto 599689236 612x612 1 1

2. குழந்தையின் விரிப்பு அல்லது ஆடைகள் சிறுநீரால் ஈரமாகி இருந்தாலும் குழந்தை அழலாம் எனவே குழந்தையின் விரிப்பு மற்றும் ஆடையை சோதித்து பார்க்கவும். டயப்பர் அணிவித்து இருந்தால் டயப்பர் நிரம்பி விட்டதா என்று பரிசோதித்து கொள்ளவும்.

3. மேலே குறிப்பிட்ட இரண்டு காரணங்களும் இல்லை என்றால் உடனடியாக குழந்தையின் உடைகளை அகற்றி உடல் முழுவதும் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏதேனும் பூச்சி, எறும்பு, கொசு, வண்டுகள் போன்றவை கடித்துள்ளதா என்று நன்கு சோதித்து பார்க்கவும். ஏற்கனவே அணிவித்து இருந்த உடை ஏதேனும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ளவும்.

4. குழந்தைக்கு அதிக அணிகலன்களை அணிவித்து இருந்தால் அதனையும் ஒரு முறை சோதித்து பார்க்கலாம். கொலுசு, அரைஞான் கயிறு, சங்கிலி போன்றவற்றில் ஏதேனும் பிசிரு இருந்து அவை குழந்தையின் உடலில் இடையூறு செய்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ளலாம்.

baby 476888 1280

5. குழந்தை பிறந்த வீட்டில் தொடர் விருந்தினர்களின் வருகை நிகழும் பொழுது அவர்கள் குழந்தையை மாற்றி மாற்றி தூக்குவதாலோ கொஞ்சுவதாலோ குழந்தைக்கு உடலில் அசதி ஏற்படும் உடல் சோர்வால் அழவும் வாய்ப்பு இருக்கிறது எனவே கூடுமானவரை இவற்றை குறைத்துக் கொள்ளலாம்.

6. சளி தொந்தரவு ஏதேனும் இருக்கிறதா என்பதை பார்க்கவும். சளி தொந்தரவு இருந்தால் மூக்கடைப்பு, காது வலி, தலைவலி போன்றவை குழந்தைக்கு ஏற்படும் எங்கு வலிக்கிறது என்று குழந்தையால் கூற இயலாது எனவே சளி தொந்தரவு அல்லது வயிற்று உபாதையோ இருக்கிறதா என்று பார்க்கவும்.

7. ஆறு மாதம் வரை குழந்தைக்கு கழுத்து சரியாக நிற்காது எனவே அதன் கழுத்துப் பகுதியில் அணைப்பு கொடுத்து குழந்தையை படுக்க வைக்க வேண்டும். இல்லையேல் குழந்தைக்கு சுளுக்கு ஏற்படும் அந்த சுளுக்கினாலும் குழந்தை அழலாம். சுளுக்கு ஏற்பட்ட குழந்தையால் தலையை திருப்ப முடியாதபடி அழும் தயவு செய்து வீட்டிலேயே வைத்தியம் பார்க்கலாம் என்று எதையும் முயற்சி செய்ய வேண்டாம். சுளுக்கினால் தான் அழுகிறது என்று தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

baby 598345 1280

8. தூக்கம் வந்தவுடன் குழந்தை அழுவது மற்றொரு இயல்பான காரணம். குழந்தையை மடியில் வைத்தோ, தோளில் தட்டியோ, தொட்டிலில் ஆட்டியோ மென்மையான தாலாட்டு பாடும் பொழுது குழந்தை அழுகையை நிறுத்தி அமைதியாக உறங்கி விடுவர்.

9. யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லை என்று குழந்தை நினைத்தாலும் தாயின் கவனத்தைப் பெறுவதற்காக அழுகத் தொடங்கலாம். அந்த சமயத்தில் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ விளையாட்டு காண்பித்து பேசினாலோ உடனடியாக குழந்தை அழுகையை மறந்து சிரிக்கத் தொடங்கி விடுவர்.

குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்றால் கைக்குழந்தையை வளர்ப்பது சற்று சவாலான கலை தான். ரசித்து செய்தால் எதுவும் எளிமையே…!